மம்தா பதிலடி சுவேந்து அதிகாரிக்கு சிஐடி போலீஸ் சம்மன்

கொல்கத்தா: கடந்த 2018ல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக சுவேந்து அதிகாரி இருந்த போது, அவரது பாதுகாப்பு அதிகாரியான மாநில ஆயுதப் படை போலீஸ் சுப்ரதா சக்ரவர்த்தி தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென சக்ரவர்த்தியின் மனைவி புகார் செய்தார். இது தொடர்பாக, மாநில சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் தற்போது பாஜ எம்எல்ஏவாக இருக்கும் சுவேந்து அதிகாரி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் அக்கட்சி எம்பியுமான அபிஷேக் பானர்ஜி, அவரின் மனைவி ருஜிரா பானர்ஜி ஆகியோரை நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்த நிலையில், சுவேந்துக்கு மாநில சிஐடி சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று பேட்டி அளித்த அபிஷேக் பானர்ஜி, ‘‘என் மீதான குற்றச்சாட்டில் ஒன்றிய விசாரணை அமைப்பு ஏதாவது ஆதாரத்தை நிரூபித்தால், பொதுவெளியில் தூக்கில் தொங்குகிறேன்’’ என கூறி உள்ளார். பபானிபூர் வேட்பாளர்: மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதையடுத்து, பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

Related Stories:

More
>