எதிர்க்கட்சி தலைவர்களிடம் காழ்ப்புணர்ச்சி காட்டாத முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள அரசியல் முதிர்ச்சி பாஜவுக்கு இல்லை: சிவசேனா எம்பி ராவத் கருத்து

மும்பை: ‘எதிர்க்கட்சி தலைவர்களிடம் காழ்ப்புணர்ச்சி காட்டாத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள அரசியல் முதிர்ச்சி பாஜவுக்கு இல்லை’ சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறி உள்ளார். நாட்டின் 75வது சுதந்திரதின விழாவை கொண்டாடும் வகையில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎச்ஆா்) வெளியிட்ட டிஜிட்டல் பேனரில், நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் பேனரில் நேரு, மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டது, அரசியல் பழிவாங்கும் செயல். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள், சுதந்தர போராட்டத்தின் நிஜ ஹீரோக்களில் ஒருவரை வரலாற்றில் இருந்து மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த அரசியல் பழிவாங்கும் செயல் நல்லதுக்கல்ல. இது அவர்களின் குறுகிய மனப்பான்மையை வெளிகாட்டுகிறது. இது, ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரர்களையும் அவமானப்படுத்தும் செயல்.

சுதந்திரத்திற்கு பிறகான நேருவின் கொள்கைகள் மீது ஒருவருக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவரின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. நேருவை இந்தளவுக்கு அதிகமாக வெறுப்பதற்கு காரணம் என்ன? அவரது தொலைநோக்குப் பார்வையில் உருவான பொதுச் சொத்துக்களை விற்றுத்தான் இன்று நீங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கப் பார்க்கிறீர்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச புத்தக பைகளில் ஒட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை நீக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி உங்களிடம் இல்லை. நேரு, இந்திரா காந்தியின் ஒப்பற்ற பங்களிப்பை உங்களில் அழிக்க முடியாது. நேருவின் பங்களிப்பை ஏற்க மறுப்புவர்கள், வரலாற்றில் வில்லன்களாகத்தான் சித்தரிக்கப்படுவார்கள்.

இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories:

More