டெல்லி போலீசில் பணியாற்றிய இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை

புதுடெல்லி: டெல்லி போலீசில் பணியாற்றிய இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசில் குடிமை பாதுகாப்பு பிரிவில் தன்னார்வலராக பணியாற்றி வந்தவர் நடாஷா (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்  கடந்த 26ம் தேதி வழக்கம்போல் காலை பணிக்கு சென்றுள்ளார். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது செல்போனுக்கு குடும்பத்தினர் அழைத்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அடுத்த நாள் சுராஜ்குந்த் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் கொடூரமாக சிதைக்கப்பட்ட நடாஷாவின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.

நடாஷாவின் உடலில் 50 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. அவரது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மார்பகம் அறுக்கப்பட்ட நிலையில் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் இந்த சம்பவத்தை மூடி மறைப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘நடாஷாவின் மரணத்தில் அவளுடன் பணியாற்றும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது. போலீசார் பொய் தகவல்களை கூறுகின்றனர். ஒருவரால் நிச்சயம் இவ்வளவு கொடூரமாக கொன்றிருக்க முடியாது. நடாஷா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்கின்றனர்.

* போலீஸ் விளக்கம்

வழக்கு பதிவு செய்த கலிண்டி குஞ்ச் போலீசார் இந்த கொலை தொடர்பாக நிஜாமுதின் என்பவர் சரணடைந்துள்ளதாக கூறுகின்றனர். போலீஸ் கூறுகையில், ‘நிஜாமுதீனும் நடாஷாவும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளனர். ஆனால், நடாஷா நடத்தையில் நிஜாமுதீனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடாஷாவை கொலை செய்துள்ளார்’’ என்கின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில், நடாஷா பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>