×

விநாயகர் சதுர்த்தி குறித்து சிலை அமைப்பாளர்களுடன் போலீசார் ஆலோசனை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி குறித்து விநாயகர் சிலை அமைப்பாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்து அமைப்பினர் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைக்கூட்டம்  ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமை தாங்கினார்.  சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, அபர்ணா, கோதண்டன், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, போலீசார் பேசுகையில், ‘கொரோனா 3வது அலை தாக்கத்திலிருந்து இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வைத்து வழிபடகூடாது என தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும், ஊத்துக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்ல கூடாது. அதேபோல், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் எடுத்துச்செல்ல கூடாது. அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சின்ன சின்ன விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டுக்கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இறுதியில், தலைமை காவலர் தனஞ்செழியன் நன்றி கூறினார்.

Tags : Ganesha Chaturthi , Police consult with idol organizers regarding Ganesha Chaturthi
× RELATED மைக்ரோசாப்ட் தலைமையகத்தில் விநாயகர்...