×

ஆவடி அருகே ரேக்ளா ரேஸ் நடத்த முயற்சி 14 குதிரை, வாகனங்கள் பறிமுதல்: 14 பேர் கைது

ஆவடி: ஆவடி அருகே வீராபுரம் முருகன் கோயில் அருகில் இருந்து நேற்று காலை ரேக்ளா ரேஸ் நடக்க இருப்பதாகவும், இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து குதிரை வண்டிகள், சரக்கு வாகனங்களில் ஏற்றி கொண்டு வரப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் மகேஷூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, போலீஸ் உதவி கமிஷனர்கள் சத்தியமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து அம்பத்தூர், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில் சரக்கு வாகனங்களில் குதிரை வண்டிகளை ஏற்றிக்கொண்டு மேற்கண்ட பகுதிகளில் ஆங்காங்கே வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து, போலீசார் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி 14 குதிரைகள், 14 சரக்கு வாகனங்கள் மற்றும் குதிரை வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், வாகனங்களை பறிமுதல் செய்வதை அறிந்து 50க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளை ஏற்றி வந்த சரக்கு வாகன டிரைவர்கள் ஓட்டி கொண்டு தப்பி சென்றனர். பின்னர், வாகனங்களை ஒட்டி வந்த 14 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களுடன் குதிரை வண்டிகளையும், சரக்கு வாகனத்தையும், குதிரைகளையும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தை கொண்டு வந்தனர்.

புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியிலிருந்து ஓரகடம் வரை ரேக்ளா ரேஸ் நேற்று அதிகாலை  நடத்த முடிவு செய்யப்பட்டது. அங்கு போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தது. இதனையடுத்து ரேக்ளா ரேஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு வாட்சாப்பில் குழுவை உருவாக்கி, அதில் ஆவடி, வீராபுரம் பகுதியில் உள்ள வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளி வட்டச் சாலையில் ரேக்ளா ரேஸ் நடத்த முடிவு செய்தனர். இந்த தகவலை வாட்ஸ்அப்  குழு மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

இதனை அறிந்து, திருச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் குதிரை வண்டிகளுடன் வந்து உள்ளனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரேக்ளா ரேஸூக்கு வாகனங்களுடன் வந்தவர்களை பிடித்து உள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக, சென்னை பரங்கிமலையை சேர்ந்த முகமது இர்பான்(26), குன்றத்தூரை சேர்ந்த பார்த்தசாரதி(36), மதுரை(55), ஆவடி கோவில்பதாகையை சேர்ந்த குணசேகரன்(24), வேலு(42), பம்மலை சேர்ந்த பாலாஜி(35), சேலையூரை சேர்ந்த நரேஷ்(40), விருகம்பாக்கத்தை சேர்ந்த தினேஷ்(27), நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன்(31), ராயப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன்(35), ராமாபுரத்தை சேர்ந்த பிரபாகரன்(34), நந்தம்பாக்கத்தை சேர்ந்த ரூபன்(24), கொடுங்கையூரை சேர்ந்த மஜீத்(24), வளசரவாக்கத்தை சேர்ந்த செல்வம்(21) ஆகிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags : Ragla Race ,Avadi , Seizure of 14 horses and vehicles while attempting to hold Ragla Race near Avadi: 14 arrested
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...