×

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 389 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார்

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சிறப்பாகப் பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5ம் நாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன், ரூ.10,000க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர். அந்த வகையில், 2020-2021ம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாகப் பணிபுரியும் 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வானார்கள்.

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, விருது வழங்குவதன் அடையாளமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* வீரர்களுக்கு பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: டோக்கியோ பாரா ஒலிம்பிக்சின் இறகுப்பந்துப் போட்டியில் இந்தியாவுக்கு மற்றுமொரு தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்துள்ள கிருஷ்ணா நாகருக்கு எனது பாராட்டுகள். தமது ஆட்டத்தில் அவர் முழுமையான ஆதிக்கம் செலுத்தி விளையாடியிருக்கிறார். மேலும், வெள்ளிப் பதக்கம் வென்று, பணியில் இருக்கும்போதே பாரா ஒலிம்பிக் பதக்கம் பெறும் முதல் ஐஏஎஸ் அலுவலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சுஹாஸ் யதிராஜ்க்கு எனது பாராட்டுகள்.

* பணிநியமன ஆணை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 52 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

Tags : Dr. ,Radhakrishnan ,Chief Minister ,MK Stalin , On the birthday of Dr. Radhakrishnan, Chief Minister MK Stalin presented the Best Author Award to 389 people
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...