கோடியக்கரை அருகே நடுக்கடலில் நாகை மீனவர்கள் 7 பேரை தாக்கி வலை, செல்போன்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை: கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 7 பேரை தாக்கி வலை, வாக்கி டாக்கி, செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரவீந்திரன்(28), கிருஷ்ணராஜ் (55), வேல்முருகன் (35), செல்வம் (18) ஆகிய 4 பேர் ஒரு பைபர் படகிலும், அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (40). அமர்நாத்(45), அகிலன்(20) ஆகியோர் ஒரு பைபர் படகிலும் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மாலை 6 மணியளவில் கோடியக்கரை தென்கிழக்கே 12 மைல் நாட்டிக்கல் தூரத்தில் 2 பைபர் படகுகளிலும் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்த வழியாக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள்உருட்டு கட்டையால் மீனவர்களை சரமாரியாக தாக்கினர். பின்னர் கத்திகளை காட்டி மிரட்டி 2 படகுகளில் இருந்த 1,000 கிலோ எடையுள்ள வலைகள், 2 செல்போன், 2 வாக்கி டாக்கி, பேட்டரி, திசைகாட்டும் கருவியை பறித்து கொண்டு சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம். இந்த தாக்குதலில் ரவீந்திரன், கிருஷ்ணராஜ், வேல்முருகன் ஆகியோர் காயமடைந்தனர்.

இதைதொடர்ந்து மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை நாகை எம்எல்ஏ முகமது ஷா நவாஸ், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் ஆகியோர்  சந்தித்து ஆறுதல் கூறினர். கடந்த ஒருவாரத்தில் 3 முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி  உள்ளது. இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: