×

நாகை மீனவர்களை தாக்கி வலை, செல்போன் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

நாகை: நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(28), கிருஷ்ணராஜூ(55), வேல்முருகன்(35), செல்வம்(18) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்களுடன் சேர்ந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கு(40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் தட்சிணாமூர்த்தி, அமர்நாத்(45), அகிலன்(20) ஆகியோரும் மீன் பிடிக்க சென்றனர். நேற்று மாலை 5 மணியளவில் கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், 2 பைபர் படகுகளிலும் இருந்த மீனவர்களை கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும் கத்திகளை காட்டி மிரட்டி 2 படகுகளில் இருந்த 1,000 கிலோ எடையுள்ள வலைகள், 2 செல்போன், 2 வாக்கி டாக்கி, பேட்டரி, திசைகாட்டும் கருவியை பறித்து கொண்டு அங்கிருந்து சென்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் மீனவர் ரவீந்திரன் காயமடைந்தார்.இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை குழும போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை சேர்ந்த மீனவர் ஆனந்த்(40). இவர் தனக்கு  சொந்தமான பைபர் படகில் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சச்சிதானந்தம்(63), அவரது மகன் கார்த்தி(36), சக்திவேல்(34) ஆகியோர் நேற்று மதியம்  மீன் பிடிக்க சென்றனர்.  இரவு  7.15 மணியளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 பைபர் படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர். கொள்ளையன் ஒருவன் கத்தியுடன், மீனவர்கள் படகில் ஏறினான். கத்தியை பிடுங்க கார்த்தி முயன்றார். அப்போது கார்த்தி கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் கொள்ளையனுடன் கார்த்தி சண்டை போட்டார். அப்போது இருவரும் கடலுக்கு தவறி விழுந்தனர். இதில் படகில் இருந்த புரபல்லர் (காற்றாடி) கிழித்து கார்த்தி மேலும் காயடைந்தார். இதையடுத்து கொள்ளையன், கார்த்தி ஆகியோர் நடுக்கடலில் தத்தளித்தனர். இதனால் சக மீனவர்கள் போராடி கார்த்தியை மீட்டனர். அதேபோல் கொள்ளையனை கொள்ளையர்கள் மீட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். நள்ளிரவு 1 மணிக்கு ஆறுகாட்டுத்துறைக்கு மீனவர்கள் வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக கார்த்தியை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர்.


Tags : Sri Lanka , Dragon fisherman, attacking net, cellphone, flush
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...