×

யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் 3வது சுற்றில் ஆஷ்லீ பார்டி அதிர்ச்சி தோல்வி

நியூயார்க்: மகளிர் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி, யு.எஸ்.ஓபன் 3வது சுற்றில், அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்சிடம் தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச் உட்பட முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். நடப்பு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியனும், சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவருமான ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி, இன்று அதிகாலை நடந்த யு.எஸ்.ஓபன் 3ம் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்சுடன் மோதினார். இதில் ஆஷ்லீ பார்டியை திணறடித்த ரோஜர்ஸ் முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.

இதனால் வெகுண்டு எழுந்த ஆஷ்லீ பார்டி ரோஜர்ஸ்சை திணறடித்து 2வது செட்டை 6-1 என அதிரடியாக கைப்பற்றினார். 3வது செட்டில் ஆஷ்லீபார்டியின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு தனது ஆட்டமுறையை மாற்றிக்கொண்ட ரோஜர்ஸ், கிடைத்த வாய்ப்புகளில் இடது, வலது என பந்தை மாற்றி, மாற்றி பிளேஸ் செய்து, பார்டியை ஓட விட்டார். இருப்பினும் இருவரும் அவரவர் கேம்களை தக்க வைத்துக் கொண்டனர். இதனால் அந்த செட் டைபிரேக்கரை எட்டியது. டைபிரேக்கரில் சரியான தருணத்தில் பார்டியின் சர்வீசை பிரேக் செய்து 3வது செட்டை ரோஜர்ஸ் கைப்பற்றினார். இதையடுத்து இப்போட்டியில் அவர் 6-1, 1-6, 7-6 என வெற்றி பெற்று, ஆஷ்லீ பார்டியின் கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 2020 பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் போலந்தின் இகா ஸ்வைடெக், ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் ஆகியோரும் மகளிர் ஒற்றையர் 3ம் சுற்றில் வெற்றியடைந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றில் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஜப்பான் வீரர் கீ நிஷிகோரியை எதிர்கொண்டார். முதல் செட்டை டைபிரேக்கரில் நிஷிகோரி கைப்பற்றினார். எனினும் அடுத்த 3 செட்களை வரிசையாக ஜோகோவிச் கைப்பற்றி 6-7, 6-3, 6-3, 6-2 என 4 செட்களில் நிஷிகோரியை வீழ்த்தி, 4ம் சுற்றுக்கு முன்னேறினார். கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ், தென்னாப்பிரிக்க வீரர் லாயிட் ஹாரிசிடம் 6-4, 6-4, 6-4 என 3 செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். அமெரிக்க வீரர்கள் ரெய்லீ ஓபெல்கா, ஜென்சின் புரூக்ஸ்பி ஆகியோரும் 3ம் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Tags : U.S. S. ,Ashlee Bardy ,Open Grandslam Tennis , U.S. Open, Grand Slam, tennis, Ashley party, defeat
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:...