×

மாஜி அமைச்சர் வேலுமணி மீது 150 பக்க ஊழல் ஆவணங்கள்: கோவை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சமர்ப்பிப்பு

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரகுநாத். சினிமா படத்தயாரிப்பாளர். திமுகவை சேர்ந்த இவர், ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது, ரூ.1,500 கோடி வரை ஊழல் செய்ததாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார். இதனிடையே சென்னை, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி. வேலுமணி, அவரது உறவினர்கள், நண்பர்கள் என அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் சோதனை நடத்தினர். முடிவில், முக்கிய ஆவணங்கள் மற்றும் லாக்கர் சாவி பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, கோவை ரகுநாத் மீண்டும் எஸ்.பி. வேலுமணி மீது பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கோவை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ளாட்சி துறையில் நடந்த ஊழல் தொடர்பாக 150 பக்கம் கொண்ட ஆவணங்களை கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் அவர் நேற்று சமர்ப்பித்தார். இது குறித்து ரகுநாத் கூறுகையில், ‘‘எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், பினாமிகள் உள்ளிட்டோர் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர். வரிப்பணம் அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தனிநபர் ஆதாயம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். எஸ்.பி.வேலுமணி மீது 150 பக்கம் கொண்ட ஊழல் ஆவணங்களை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளேன். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : minister ,Velumani ,Coimbatore Anti-Corruption Police , 150 page corruption documents against former minister Velumani: Submission to Coimbatore Anti-Corruption Police
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...