×

விமான நிலைய சுங்கத்துறை துணை கமிஷனருக்கு கத்திக்குத்து

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து குமரன் (32), தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சர்மிளா (30), சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை துணை கமிஷனராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் சம்மத்துடன்  திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு, 5 மற்றும் ஒன்றரை வயதில் மகன், மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தம்பதி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற சர்மிளா, நேற்று அதிகாலை வீடு திரும்பினார்.

அப்போது, ‘‘மதுரையில் நடைபெறும் தனது உறவினரின் திருமணத்துக்கு செல்ல வேண்டும்’’ என கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு செல்வமுத்து குமரன், மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த சர்மிளா சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, ‘‘என்னை திருமணத்துக்கு அனுப்பவில்லை என்றால், என்னை நானே கத்தியால் குத்தி தற்கொலை செய்துகொள்வேன்’’ என்று மிரட்டியுள்ளார். இதை பார்த்த செல்வமுத்து குமரன் மனைவியிடம் இருந்த கத்தியை பறித்துள்ளார். அப்போது, சர்மிளா கணவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த செல்வமுத்து குமரன், மனைவியிடம் இருந்த கத்தியை பிடுங்கி, அவரை கழுத்து, வயிறு என பல இடங்களில் சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த சர்மிளா அலறியவாறு ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வமுத்து குமரனை கைது செய்து விசாரிக்கின்றனர். சர்மிளா, ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையர் கிருஷ்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Deputy Commissioner ,Airport Customs , Shouting to the Deputy Commissioner of Airport Customs
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...