பார்டர் படத்தை வெளியிட தடை கோரி மனு: தயாரிப்பாளர் பதில் தர சிவில் கோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஆண்டனி சாம். இவர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பார்டர் என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். படத்திற்கான தணிக்கை சான்று பெற்று, படத்தை வெளியிட உள்ள நிலையில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்டர் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரத்தை ஆல் இன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

 ஏற்கனவே, பார்டர் என்ற தலைப்பை பதிவு செய்துள்ள நிலையில், அதே தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டால் எனக்கு பெருத்த இழப்பு ஏற்படும். எனவே, பார்டர் என்ற தலைப்பில் அருண் விஜய் நடித்துள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை 6வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், இந்த மனுவுக்கு ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

Related Stories:

>