×

பாரா ஒலிம்பிக் பேட்மின்டனில் அசத்தல் தங்கம் வென்றார் பிரமோத்: மனோஜ் வெண்கலம் வென்றார்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர்கள் பிரமோத் பகத் தங்கம் மற்றும் மனோஜ் சர்க்கார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளனர். பாரா ஒலிம்பிக் போட்டியில் மற்ற ஆட்டங்களில் இல்லாத அளவுக்கு பேட்மின்டனில் இந்திய வீரர்கள் அமர்க்களமாக செயல்பட்டு அதிக எண்ணிக்கையில் அரையிறுதிக்கு முன்னேறினர். அதனால் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பும் அதிகரித்தது. அதற்கேற்ப நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பேட்மின்டன் (எஸ்எல்3) அரையிறுதியில் இந்திய வீரர் பிரமோத் பகத் 21-11, 21-16 என நேர் செட்களில் ஜப்பான் வீரர் டய்சுகே ஃபுஜிஹராவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். மாலையில் நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் டேனியல் பெட்யெல்லை எதிர்கொண்ட பிரமோத் 21-14, 21-17 என நேர் செட்களில் டேனியலை வீழ்த்தினார்.

இதன் மூலமாக நடப்பு தொடரில் இந்தியாவுக்கு 4வது தங்கப் பதக்கம் வசமானது. ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் (33 வயது), ஐஐடியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 5வது வயதில் இடது காலில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது.
முன்னதாக பேட்மின்டன் எஸ்எல்3 பிரிவின் மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மனோஜ் சர்க்கார் 8-21, 10-21 என நேர் செட்களில் இங்கிலாந்தின் டேனியலிடம் போராடி தோற்றார். இதையடுத்து, 3வது இடத்துக்கான ஆட்டத்தில் அவர்  ஜப்பானின் டய்சுகே ஃபுஜிஹராவை 22-20, 21-13 என நேர் செட்களில் வீழ்த்தி வெண்கலம் வென்றார். உத்ரகாண்டை சேர்ந்த மனோஜ் (31) சிறு வயதில் போலியோவால் வலது கால் பாதிக்கப்பட்டவர்.

Tags : Pramod ,Manoj ,Paralympic Badminton , Pramod: Manoj wins bronze at Paralympic Badminton
× RELATED பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜனுக்கு சீட் மறுத்தது பா.ஜ