லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்டில், ரோகித் ஷர்மாவின் அபார சதத்தால் இந்திய அணி 2வது இன்னிங்சில் ரன் குவித்து வருகிறது. ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து 290 ரன் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, 99 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்திருந்தது. ரோகித் 20, ராகுல் 22 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ராகுல் 46 ரன் எடுத்து (101 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஆண்டர்சன் வேகத்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து, ரோகித்துடன் புஜாரா இணைந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். அபாரமாக விளையாடிய ரோகித், டெஸ்ட் போட்டிகளில் தனது 8வது சதத்தை நிறைவு செய்தார். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்திருந்தது. ரோகித் 103 ரன், புஜாரா 48 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.