×

தேர்தல் ஆணையம் அறிவிப்பு மம்தாவின் தொகுதியில் வரும் 30ல் இடைத்தேர்தல்: மீண்டும் களைகட்டும் மேற்குவங்கம்

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ள பபானிபூர் உட்பட 4 தொகுதிகளில் வரும் 30ம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 294 இடங்களில் 213 தொகுதிகளை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜ 77 இடங்களில் வென்றது. மம்தா 3வது முறையாக முதல்வராக பதவியேற்றார். ஆனாலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, திரிணாமுலில் இருந்து வெளியேறி பாஜவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இதனால், முதல்வராக பதவியேற்ற மம்தா அடுத்த 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதையடுத்து, மம்தா போட்டியிடுவதற்காக, பபானிபூர் தொகுதி திரிணாமுல் எம்எல்ஏ ஷோபன்தேவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதியில் மம்தா ஏற்கனவே 2011, 2016ல் போட்டியிட்டு வென்றுள்ளார். எனவே, பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவது உறுதியானது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜங்கிபூர் மற்றும் ஒடிசாவின் பிப்லி ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெறும். மம்தா முதல்வராக பதவியில் தொடர, பபானிபூரில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். இதுவரை கொரோனாவை காரணம் காட்டி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வந்த நிலையில் தற்போது தேதி அறிவிக்கப் பட் டுள்ளதால் மம்தா உற்சாகமடைந்துள்ளார்.

* மேலும் ஒரு பாஜ எம்எல்ஏ திரிணாமுலில் சேர்ந்தார்
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சென்றவர்கள் தற்போது மீண்டும் திரிணாமுல் கட்சிக்கே திரும்பி வருகின்றனர். அந்த வகையில், கலியாகஞ்ச் தொகுதி பாஜ எம்எல்ஏ சோமன் ராய் நேற்று அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுலில் இணைவதாக அறிவித்தார். ‘‘பாஜ சார்பில் நான் வெற்றி பெற்றாலும், எனது ஆன்மா, இதயம் எல்லாமே திரிணாமுல் கட்சிக்கே சொந்தம்’’ என்றார் சோமன் ராய். பாஜவிலிருந்து திரிணாமுலுக்கு திரும்பும் 4வது எம்எல்ஏ சோமன் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Election Commission ,Mamta , Election Commission announces by-elections in Mamata's 30th constituency: West Bengal weeding again
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...