×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா கார் டிரைவரின் மனைவி, மைத்துனரிடம் விசாரணை: எஸ்டேட் பங்களாவில் தனிப்படை திடீர் ஆய்வு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2ம் தேதி நடந்த விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் புலன் விசாரணை மேற்கொள்ள 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும், இது தொடர்பாக போலீசாரும் முக்கிய அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, நீதிபதி சஞ்சய்பாபா நான்கு வாரங்கள் அவகாசம் அளித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ஐஜி சுதாகர் தலைமையில் போலீசார் ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். மேலும், கொடநாடு விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள கூடுதல் எஸ்பிக்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் மற்றும் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் முகாமிட்டு, இந்த விசாரணை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடநாடு வழக்கு மேற்கொள்வதற்காகவே, தற்போது இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்கு முன்னதாக, விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளனர். விரைவில் நேபாளம் சென்று கொடநாட்டில் காவலாளியாக பணியாற்றிய கிருஷ்ண தாபாவிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக ஒரு தனிப்படை விரைவில் நேபாளம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் மர்மமான முறையில் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது அண்ணன் தனபாலிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது தனது தம்பி சாலை விபத்தில் சாகவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் ரகசிய இடத்தில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில், ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் அவரது மைத்துனர் தினேஷிடம் நேற்று ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது என்றும் அதனடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையின் நகர்வுகள் இருக்கும் என்றும் தெரிகிறது. எஸ்டேட்டில் ஆய்வு: இந்நிலையில் நேற்று தனிப்படை போலீசார் கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்றனர். அங்கு, கொலை நடந்த இடம், கொள்ளை நடந்த பங்களா ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அங்கு பணியில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.  போலீசாரிடம் எஸ்டேட் மேலாளர் நடராஜன் கொலை, கொள்ளை நடந்த இடத்தை காண்பித்து விளக்கம் அளித்தார்.


Tags : Kodanadu ,Jayalalithaa , Kodanadu murder, robbery case: Jayalalithaa car driver's wife, nephew interrogated
× RELATED சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு: 8-வது...