குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைக்க அரசுக்கு தானமாக கொடுத்த நிலம் ஆக்கிரமிப்பு: வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார்

திருப்போரூர்: திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சுவிடம், திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி நந்தா நகர் குடியிருப்போர் நலச்சங்கம் நிர்வாகிகள் புகார் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில், நந்தா நகர் என்ற பெயரில் சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1989ம் ஆண்டு 204 மனைகள் கொண்ட வீட்டு மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 1 ஏக்கர் 62 சென்ட் (அதாவது 70,600 சதுரஅடி) பரப்பளவில் அமைக்கப்பட்ட 2 பூங்காக்கள், சாலைகள் ஆகியவை திருப்போரூர் ஒன்றிய நிர்வாகத்துக்கு தானமாக வழங்கப்பட்டு, அதற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிடிசிபி அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மனைப்பிரிவில் மனை வாங்கியவர்களில் 50க்கும் மேற்பட்டோர், தற்போது வீடு கட்டி வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதியில் 2 பூங்காக்கள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, தற்போது ரூ.3 கோடி என கூறப்படுகிறது. இந்த பூங்கா இடத்தை, தற்போது தனிநபர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இதுகுறித்து, கடந்த 2017 டிசம்பர் 18ம் தேதி, அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னைய்யாவிடம் நேரடியாக, பூங்கா இடத்தை மீட்டுத்தரும்படி மனு அளித்தோம். பின்னர், செங்கல்பட்டு மாவட்டம் உருவான பிறகு, மீண்டும் கலெக்டரிடம் மனு அளித்தோம்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பெற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற கோரியும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றப்பட்டு பூங்கா நிலம் மீட்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கவில்லை. இதனால், ஆக்கிரமிப்பு செய்த தனிநபர், தனது கட்டிடத்துக்கு ஒப்புதல் கேட்டு மனு செய்யும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூங்கா இடத்தை மீட்டு, கட்டிடத்தை அகற்றி பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>