விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை ஏன்? பாஜ உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி (பாஜ) பேசியதாவது: காலம் காலமாக இந்துக்கள் முழுமுதற் கடவுளாக விளங்குகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறார்கள். மகாராஷ்டிரா அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதித்துள்ளது. அதே போன்று தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: உறுப்பினர் பேசுகின்றபோது விநாயகர் சதுர்த்திக்கு அனுமதிக்க வேண்டும் என்றார். கொரோனா நோய் பரவல் என்பது, ஆட்கொல்லி நோயாக இருக்கிறது.

இதற்கு, வரும்முன் காப்பது தான் அறிவாளி என்ற ஒரு வகையிலே தமிழக முதல்வர் எடுத்து வருகின்ற, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கையில் அதுவும் ஒன்று. முதல்வரின் கொள்கையை, அவரவர்கள் விரும்புகின்ற வழிபாடுகளை, அவரவர்கள் சுதந்திரமாக அமைதியாக, அவரவர்கள் பிரார்த்தனை செய்வதில் எந்த இடையூறும் இருக்க கூடாது என்று தான் வலியுறுத்தி வருகின்றார். அந்த வகையில் இந்த விநாயகர் சதுர்த்தியை பொறுத்த வரையில், நம்முடைய ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய்பல்லா,‘‘இந்த கொரோனா தொற்றின் 3வது அலை வருகின்ற ஒரு சூழ்நிலை இருப்பதால், திருவிழாக்களோ அல்லது கூட்டமாக மக்கள் கூடுவதையோ, அனுமதிக்க கூடாது’’ என்று கூறியிருப்பதை உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories:

More