பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்தானதால் ரூ.238 கோடி அரசுக்கு ஜிஎஸ்டி மூலமாக கிடைக்கும்: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

சென்னை: பஞ்சு மீதான ஒரு சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரூ.238 கோடி அரசுக்கு ஜிஎஸ்டி மூலமாக கிடைக்கும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறினார். சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு சதவீத வரி ரத்து செய்யப்படும் என்று 110வது விதியின் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பை செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன், வேல்முருகன், ஈஸ்வரன், ஜி.கே.மணி உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் பாராட்டி பேசினார். இதைத்தொடர்ந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பேசும்போது, ‘‘இந்த அரசு பொறுப்பேற்று 60வது நாளில் நூற்பாலை பிரச்னை குறித்து விவாதிக்க கோவை சென்றேன்.

அங்குள்ள சவுத் இந்தியா மில்ஸ் அசோசியேஷன் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. அவர்களின் முதல் கோரிக்கை, பஞ்சு மீதான ஒரு சதவீதம் நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் வைத்தார்கள். முதல்வர் ஆலோசித்து நிச்சயம் செய்வார் என்று உறுதி அளித்தேன். நுழைவு வரியை தள்ளுபடி செய்ததால் ரூ.238 கோடி அரசுக்கு ஜிஎஸ்டி மூலமாக கிடைக்கும். அது மட்டுமல்ல, தரமான பருத்தி கிடைக்க வாய்ப்புள்ளது. உலகமே பாராட்டும் தலைவராக நமது முதல்வர் உள்ளார். கடந்த ஆட்சியில், தினசரி 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு மதிப்பு இல்லை. ஆனால், நமது முதல்வர் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் மக்களிடம் இருந்து பாராட்டுகள் வருகிறது” என்றார்.

Related Stories:

>