×

203 ஏக்கர் வேளாண் நிலங்கள் கோயில்களிடம் ஒப்படைப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டப்பேரைவையில் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளதாவது: மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களில் 2 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தனியார் பெயரில் தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்ட 60 கோயில்களுக்கு சொந்தமான 301.44 ஏக்கர் நிலங்கள், கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று கோயில்களுக்கு சொந்தமான 11.12 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய நிலங்களின் பதிவுகள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ள சிட்டாக்களோடு ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்து சமய நிறுவனங்களின் மிகப் பெரும் நிலவளங்களை சிறப்பாக நிர்வகிக்கவும், தனியார் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலங்களை கண்டறிந்து மீட்டெடுக்கவும் வருவாய்த் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றவும் தொகுப்பூதிய அடிப்படையில் 8 ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்கள், 20 ஓய்வுபெற்ற வட்டாட்சியர்கள், 17 ஓய்வுபெற்ற நில அளவையர்கள், 3 ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் 9 ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திமுக அரசு அமைந்த பிறகு, ரூ.641 கோடி மதிப்பிலான, 203 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும், 170 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும், 1.8 கிரவுண்டு கட்டிடங்களும், 15.5 கிரவுண்டு அளவிலான கோயில் குளக்கரை பகுதிகளும் மீட்கப்பட்டு அந்த கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

* ரூ.1000 கோடி சொத்துகள் இந்தாண்டுக்குள் மீட்கப்படும்
அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற 120 நாட்களில் ரூ.641 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இன்றைக்கு மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக ரூ.1000 கோடி அளவிற்கு சொத்துக்களை மீட்போம். ஆவணங்களை பாதுகாப்பதற்காக 4 கோடி பக்கங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. 100 நாட்களில் 100க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறோம். துறை சார்ந்த கல்விச்சாலைகளை நெறிமுறைப்படுத்த 12 கல்வியாளர்களை கொண்ட ஆலோசனை குழுவை முதன்முதலாக நியமித்திருக்கின்றோம்.  

ஒரு கால பூஜை நடைபெறும் 12959 கோயில்களுக்கு கூடுதலாக ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருக்குளங்கள், திருத்தேர்கள், நந்தவனங்களின் திருப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கி தரப்பட்டுள்ளது. 58 அர்ச்சகர்கள் உட்பட 300 பேருக்கு கோயில்களில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தணிகைமலை முருகன் கோயிலில் 9 ஆண்டுகளாக தங்கரதமும், வெள்ளி தரமும் வீதி உலா வருவதில்லை. கோயிலில் கட்டி முடிக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கு 365 படிக்கட்டுகள் இருக்க வேண்டும். மொத்தம் 300 படிக்கட்டுகளோடு அந்தரத்தில் நிற்கிறது. அந்த கோபுரத்தின் இணைப்பிற்காக 65 படிக்கட்டுகளை கட்ட வேண்டும்.

* கோயில் நிலங்களில் வசிப்பவர்களில் யாருக்கு பட்டா?
சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:  2008ம் ஆண்டு கலைஞர் ஓர் ஆணை வெளியிட்டார். 2019ம் ஆண்டு அரசாணை வெளியிட்டார்கள். கோயிலிலே குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என்ற ஓர் ஆணை. அந்த ஆணையை எதிர்த்து அன்றைக்கு ராதாகிருஷ்ணன், சம்பந்தம், மூர்த்தி என்ற 3 பேர் நீதிமன்றத்திற்கு சென்ற போது, நீதிபதி,  ‘கோயில் நிலங்களில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என்ற ஒரு தீர்ப்பை தடையாணையை தந்திருக்கிறார். ஆகவே, அந்த தடையாணை இருப்பதால், முதல்வர் துறை சார்ந்த ஆய்வு கூட்டத்திலே இதை வலியுறுத்தியபோது நீதிமன்ற தடையாணை ரத்து செய்யப்பட்ட பிறகு தான் இதற்குண்டான பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற அறிவுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து ஆழ்ந்து பரிசீலித்து ஒரு நல்ல முடிவினை முதல்வர் எடுப்பார். நீதிமன்ற தடையாணை என்பது 2019ம் ஆண்டு பெறப்பட்ட ஒன்று. அதன் பிறகு தொடர்ந்து ஆட்சியிலே இருந்தவர்கள், அந்த தடையாணையை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதோடு மட்டுமல்லாமல், சமீபத்தில் நீதிபதிகள், ‘கோயிலுக்கு சொந்தமான இடங்களை யாருக்கும் வாடகைக்குகூட விடக்கூடாது. ஏதாவது வேறு நிறுவனங்கள் கேட்டால் கூட அதை அவர்களுக்கு விற்க கூடாது’’ என்று ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். முதல்வர் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய சொல்லியிருக்கிறார். விரைவில் இது குறித்து ஒரு நல்ல முடிவை எதிர்ப்பார்க்கலாம்.


Tags : Minister Sekarbabu , 203 acres of agricultural lands handed over to temples: Minister Sekarbabu
× RELATED ராயபுரம் பகுதிகளில் 3,400...