பஞ்சு மீதான 1 சதவீத வரி நீக்கம் 35 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி: சைமா-இந்திய ஜவுளி கூட்டமைப்பு நிர்வாகிகள் பேட்டி

கோவை: பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சு மீதான ஒரு சதவீத விவசாய சந்தை வரியை நீக்கிய தமிழக முதல்வருக்கு சைமா மற்றும் பஞ்சாலை சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க துணை தலைவர் ரவிசாம் ஆகியோர் கோவையில் நேற்று அளித்த பேட்டி: பருத்தி மற்றும் பருத்தி கழிவு பஞ்சு மீதான தமிழக விவசாய  சந்தை வரி கடந்த 1959-ம் ஆண்டில் 0.5 சதவீதமாக இருந்தது. இது, கடந்த 1987-ம் ஆண்டு முதல் 1 சதவீதமாக உயர்த்தப்பட்டது.  இதனால், தமிழகத்தில் சுமார் 80 சதவீத சிறு நூற்பாலைகள், 50 சதவீத ரோட்டார்களை கொண்ட நூற்பாலைகள் பாதிக்கப்பட்டன.

அத்துடன், தமிழகத்தில் உள்ள பருத்தி விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட பருத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.  கடந்த 35 ஆண்டுகளாக இந்த வரியை நீக்கக்கோரி தமிழக விவசாயிகளும், ஜவுளித்துறையினரும் மாநில அரசை வலியுறுத்தி வந்தனர். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லை. தற்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே 110-வது விதியின்கீழ் இந்த வரியை நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது, ஜவுளித்துறையினர் நெஞ்சில் பால் வார்ப்பதுபோல் உள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் உள்ள 700 பெரிய மில்கள், 1,300 குறு, சிறு மற்றும் நடுத்தர மில்கள் என சுமார் 2 ஆயிரம் பஞ்சாலைகள் பயன்பெறும். சுமார் 2  லட்சம் பருத்தி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

அத்துடன், ஓப்பன் எண்ட் மில்கள், விவசாயிகள், நெசவாளர்களும் பயன்பெறுவார்கள். இந்த வரி விதிப்பு காரணமாக மூடப்பட்டு கிடக்கும் பல்வேறு ஜின்னிங் பேட்டரிகள் இனி திறக்கப்படும். தமிழக பஞ்சாலைகள் பயன்பெறும் வகையில்,  கோவை, மதுரை, சேலம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் டெப்போ அமைக்கப்படும். நீண்டகால கோரிக்கையை தாய் உள்ளத்தோடு நிறைவேற்றி தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜவுளித்துறையினர், விவசாயிகள், நெசவாளர்கள் சார்பில் மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இனி, தமிழக பருத்தி உற்பத்தி வரும் 2030க்குள் 5 லட்சம் பேல்களில் இருந்து 25 லட்சம் பேல்களாக உயரும். சுமார் 10 லட்சம் பருத்தி விவசாயிகள் பயன்பெறுவார்கள். மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. வரி பல மடங்கு உயரும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

* இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு நன்றி

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆ.சக்திவேல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்:முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பினால் விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், ஆடை உற்பத்தியாளர்கள், பஞ்சு மறுசுழற்சி செய்வோர் போன்றோரும் பயன் பெறுவர். தொடர்ந்து உயர்ந்து வரும் நூல்விலை ஏற்றத்தால் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த அறிவிப்பு நூல் விலை உயர்வை ஓரளவு குறைக்க உதவியாக இருக்கும். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பாகவும், அகில இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பின் சார்பாகவும் நன்றி் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More