×

அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலத்தில் 4ல் மீண்டும் பாஜக; பஞ்சாப்பில் ஆம்ஆத்மி: தனியார் நிறுவன கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநில மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், 5 மாநிலங்களில் 4 மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்றும், பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆம்ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.  அடுத்தாண்டு தொடக்கத்தில் அதாவது மார்ச் மாதத்திற்குள் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களிலும், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் டிசம்பர் (2022) மாதத்திற்குள்ளும் பேரவை தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். இதில், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், உத்தரபிரதேசம், கோவா ஆகிய மாநில தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் கண்களும் வாக்காளர்களின் மனநிலையில்தான் உள்ளன. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், மணிப்பூர், ​​கோவா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆளுங் கட்சியாக பாஜக உள்ளது. மேற்கண்ட ஐந்து மாநிலங்களிலும், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது வெற்றிக் கணக்கை தொடங்க பரவலாக பிரசாரம் செய்து வருகிறது.

குறிப்பாக பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. தேசிய கவனத்தை பெற்றுள்ள நாட்டின் மிக பெரிய மாநிலமான உத்தரபிரதேச பேரவை தேர்தலானது, வரும் 2024ம் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ‘அரையிறுதி’ (செமி பைனல்) போட்டியாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக, மேற்கண்ட ஐந்து மாநில வாக்காளர்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் வகையில், ஏபிபி மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அதன் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் மாநிலம் வாரியாக கருத்துக் கணிப்பு விபரங்கள் வருமாறு:

பஞ்சாபில் ஆம் ஆத்மி

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஆளும் காங்கிரஸ் 38 முதல் 46 இடங்களுடன் இரண்டாம் இடத்திற்கு சென்றுவிடும். ஆம் ஆத்மி கட்சி 51 முதல் 57 இடங்களையும், சிரோன்மணி அகாலி தளம் 16 முதல் 24 இடங்களையும், பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தோற்கும். காங்கிரஸ் கட்சியின் வாக்கு சுமார் 28.8 சதவிகிதம், சிரோன்மணி 21.8 சதவீதம், ஆம்ஆத்மி 35.1 சதவீதம், பாஜக 7.3 சதவீதம் பெறும். முதல்வராக அமரீந்தர் சிங்கே தொடர 18 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 22 சதவீதம் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். 19 சதவிகிதம் சுக்பீர் பாதலையும், 16 சதவீதம் பேர் பகவந்த் மான், 15 சதவீதம் பேர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட்டில் மீண்டும் பாஜக

உத்தரகாண்டில் பாஜகவை சேர்ந்த புஷ்கர் சிங் தாமி முதல்வராக இருந்து வருகிறார். வரும் தேர்தலில் பாஜக 43 சதவிகிதம், காங்கிரஸ் 23 சதவிகிதம், ஆம் ஆத்மி கட்சி 6 சதவிகிதம் மற்றும் மற்றவர்கள் 4 சதவிகித வாக்குகள் பெறலாம். மொத்தமுள்ள 70 இடங்களில் ஆளும் பாஜக 44 முதல் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கலாம். காங்கிரஸ் 19 முதல் 23 இடங்கள், ஆம் ஆத்மி அதிகபட்சம் 4 இடங்கள் மற்றும் மற்றவைக்கு 2 இடங்கள் வரை கிடைக்கும். உத்தரகாண்டில் 30 சதவிகித மக்கள் ஹரிஷ் ராவத் முதல்வராக வரவேண்டும் என விரும்புகிறார்கள். 23 சதவிகித மக்கள் தற்போதைய  முதல்வர் புஷ்கர் சிங் தாமியை ஆதரிக்கிறார்கள்; 19 சதவிகிதம் பேர் அனில் பலூனி, 10 சதவிகிதம் பேர் கேணல் கோதியால், 4 சதவிகித பேர் சத்பால் மகாராஜ் ஆகியோரை ஆதரிக்கின்றனர்.

கோவாவில் மீண்டும் பாஜக

கோவா முதல்வராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் உள்ளார். இங்குள்ள 40 தொகுதிகளில் பாஜக 39 சதவிகிதம், காங்கிரஸ் 15 சதவிகிதம், ஆம்ஆத்மி கட்சி 22 சதவிகிதம் மற்றும் மற்றவர்கள் 24 சதவிகிதம் வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. அதில், 22 முதல் 26 இடங்களை கைப்பற்றி கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 7 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 4 முதல் 8 இடங்களும், மற்றவர்களுக்கு 3 முதல் 7 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மணிப்பூரில் மீண்டும் பாஜக

மணிப்பூரில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 32 முதல் 36 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளது. மேலும், காங்கிரஸ் 18 முதல் 26, என்பிஎப் 2 முதல் 6 இடங்களையும், மற்றவை அதிகபட்சம் 4 இடங்களையும் பெறலாம். பாஜகவை பொருத்தவரை 40 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 35 சதவிகித வாக்குகளையும், என்பிஎப் 6 சதவிகிதமும், மற்றவர்கள் 17 சதவிகித வாக்குகளையும் பெறலாம்.  மற்ற கட்சிகள் சுயேச்சைகளுக்குப் போகலாம். மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்குக்கு அதிகளவில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக
உத்தரபிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெறும் நிலையில், இம்மாநில தேர்தல் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளில்  259 முதல் 267 இடங்களை பாஜக கைப்பற்றி மீண்டும் தக்கவைக்க வாய்ப்புள்ளது. மேலும், சமாஜ்வாதி கட்சி 109 முதல் 117 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 12 முதல் 16 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 இடங்களையும், மற்றவர்கள் 6 முதல் 10 இடங்களையும் கைப்பற்றுவர். இந்த தேர்தலில் பாஜக 42 சதவிகித வாக்குகளையும், சமாஜ்வாதி கட்சி 30 சதவிகித வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 16 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 5 சதவிகித வாக்குகளையும், மற்றவர்கள் 7 சதவிகித வாக்குகளையும் பெறவாய்ப்புள்ளது.

மேற்கண்ட தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும் போது, ஒன்றிய பாஜக அரசுக்கு சாதகமான முடிவுகளாக கருதப்பட்டாலும், அடுத்து வரும் மாதங்களில் அரசியல் சூழ்நிலைகள் மாறலாம் என்று கூறப்படுகிறது. வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு, வேலைவாய்ப்பின்மை, தனியார்மயம் ஊக்குவிப்பு, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வகுப்புவாத மோதல்கள் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும் நிலையில், மேற்கண்ட மாநில தேர்தல்களிலும் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை எதிர்த்தால் தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  காரணம், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராடியது, தேசிய அளவில் கவனத்தை பெற்றது. அப்போது எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்த குரலாக, வரும் மாநில சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில், பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Amadami ,Punjab ,Bhajaka , Assembly elections, BJP
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்