×

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். ஏலகிரி, ஜவ்வாதுமலை பகுதிகள் பல்வேறு வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும். முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை உணவகம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.

 சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் முடிந்ததற்கு பிறகு அமைச்சர் பதிலுரை அளித்து வருகிறார். அதில் பல்வேறு விதமான புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக மெரினா கடற்கரையை பொறுத்தவரை படகு சவாரிக்கு அனுமதி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 75வது சுதந்திர விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 75 சுற்றுலா தலங்களை விளம்பரப்படுத்தப்படும் என்றும் தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலா பல்வேறு சுற்றுலா தலங்கள் பங்குதாரர்கள் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

கிராமிய மற்றும் மலைத்தோட்ட சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மலை, ஆன்மீக தலங்கள், கேபிள் கார் வசதியை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுக்கான ஆய்வுகள் நடந்து வருவதாகவும், சொகுசு கப்பல் சேவை மற்றும் படகு சேவையை சுற்றுலாத்துறை நகரங்களுக்கிடையே அறிமுகப்படுத்த சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரான பூம்புகார் புனரமைக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Marina Beach ,Chennai ,Tourism Minister ,Vidavenantan , Chennai Marina Beach
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...