வேலூரில் மாநகராட்சி, வருவாய்த்துறை, வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் போட்டி, போட்டு கட்டப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள்

* பல லட்சங்களுக்கு விற்பனை செய்து கொள்ளை

* கலெக்டர் நடவடிக்கைக்கு காத்திருக்கும் மக்கள்

வேலூர்: வேலூரில் மாநகராட்சி, வருவாய்த்துறை, வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் போட்டி, போட்டு கட்டப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பல லட்சங்களுக்கு விற்பனை செய்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதில் கலெக்டரின் நடவடிக்கைக்கு மக்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் அரசு நிலங்கள், கோயில்நிலங்கள், நீர்வழித்தடங்கள், நீர்நிலைகள், வனப்பகுதிகள் என்று அனைத்து இடங்களும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் நிர்நிலை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே வேலூரில், மாநகராட்சி, வருவாய்த்துறை, வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் அதிகளவு ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதனை கண்காணித்து மீட்க வேண்டிய துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக வேலூர் அடுத்த வள்ளலார் பகுதியில் மலையடிவாரம் உள்ள ஐயப்பன் கோயில் அருகே மாநகராட்சி பள்ளிக்காக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்துக்கு செல்லும் வழி மற்றும் அதையொட்டி பல ஏக்கர் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு கும்பல், அப்பகுதியில் முதலில் ஹாலோபிரிக்ஸ் கற்களை கொண்டு சிறிய அறையாக கட்டுகின்றனர். பின்னர் அதனை சுற்றி சுற்றுசுவர் எழுப்பி, வர்ணம் பூசி இடத்தை முழுவதுமாக சொந்தமாக்கிக்கொள்கின்றனர். பெரிய அளவிலான மரங்கள் இருந்தால் அதனை சுற்றி சுற்றுசுவர் எழுப்பி பின்னர் மரத்தை வெட்டி அகற்றி விடுகின்றனர். இரவு பகலாக இந்த பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதையடுத்து அதிகாரிகளின் ஆசியில் மின் இணைப்பு பெற்று வேலையை முடித்துக்கொள்கின்றனர்.

பின்னர், ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தை, ₹20 லட்சத்தில் இருந்து ₹30 லட்சம் வரையில் விற்பனை செய்து முக்கிய பிரமுகர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார்கள் ெதரிவிக்கின்றனர். போட்டிபோட்டு செய்யப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மேற்கண்ட துறை அதிகாரிகளோ ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடம் எங்களுக்கு சொந்தமான இடம் இல்லை என்று கைவிரித்துள்ளனர்.

இதனால் தற்போது சர்வசாதாரணமாக இடத்தை வளைத்துப்போட்டு கட்டிடங்களை கட்டுகின்றனர். அந்த இடம் 3 துறையினருக்கும் சம்பந்தப்பட்டது இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டிக்கொள்ளலாமா? என்று ேகள்வி எழுப்புகின்றனர். இதேநிலை வேலூரின் பல்வேறு இடங்களிலும் காணப்படுகிறது. மாநகராட்சி, வருவாய்த்துறை, வனத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்புகளை தடுப்பதை விட்டு பொறுப்பை தட்டிக்கழிப்பதால் வேலூர், சுற்றுப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இதனை தடுக்காவிட்டால், வரும் காலங்களில் அரசுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டுவதற்கு 100 அடி இடம் கூட இல்லாத சூழல் ஏற்படும். எனவே வேலூர் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காகிதப்பட்டறையிலும் இப்படித்தான் ஆக்கிரமிப்பு

வேலூர் காகிதப்பட்டறை டான்சிக்கு அருகே உள்ள இடங்களிலும் இப்படித்தான் கொரோனா லாக்டவுன் நேரத்தில் ஹாலோபிரிக்ஸ் கற்களைக் கொண்டு ஆக்கிரமித்து இரவோடு இரவாக குடோன் போன்று கட்டப்பட்டுள்ளது. இந்த இடமும் மாநகராட்சி, வருவாய்த்துறை, வனத்துறை என்று 3 துறைகளும் தங்களுக்கு சொந்தமான இடம் இல்லை என்று கைவிரித்து விட்ட நிலையில் அப்பகுதியிலும் மலையின் உச்சிவரை ஆக்கிரமிப்புகள் தாராளமாக தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விஏஓ ஆசியுடன் மின் இணைப்பு

வேலூர் வள்ளலார் பகுதியில் ஆக்கிமித்து அரைகுறையாக கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்புகளை விஏஓக்கள் அனுமதியின்றி பெற்றிருக்க முடியாது. மின்வாரிய அதிகாரிகளும், உரிய ஆவணங்களை சரியான முறையில் ஆய்வு ெசய்திருந்தால் இப்படி முறைகேடாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு கொடுப்பதை தடுத்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் விலைபோவதால் தான் ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாக நடக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Related Stories:

More
>