×

சுகாதாரத்துறை அலுவலகத்தில் நோய் பரப்பும் வகையில் நடந்த நேர்காணல்: அதிகாரிகள் அலட்சியம்

கோவை: கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடந்த ஆய்வக உதவியாளர் பணிக்கான நேர்காணல் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் நோய் பரப்பும் வகையில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் திருமண நிகழ்ச்சி, கடைகள், வழிபாடு தளங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை மீறும் நிறுவனங்கள், கம்பெனிகள், தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், எவ்வித கொரோனா வழிமுறைகளையும் பின்பற்றாமல், கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று ஆய்வக உதவியாளர் பணியிடம் மற்றும் கண்காணிப்பாளர் பணிக்கான நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணல் சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடந்தது.

இதற்கு கோவை மட்டுமின்றி தூத்துக்குடி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் வந்தனர். காலை 9 மணிக்கு நேர்காணல் நடப்பதாக அறிவிக்கபட்டிருந்த நிலையில், சுமார் 2 மணி நேரம் தாமதமாக நேர்காணல் நடந்தது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடந்த நேர்காணலில் தனிமனித இடைவெளி உள்ளிட்டவை கடைபிடிக்கப்படவில்லை.

நேர்காணலுக்கு வந்தவர்களுக்கு கிருமி நாசினி அளிப்பது, உடல் வெப்பநிலை பரிசோதனை போன்றவையும் செய்யவில்லை. சுகாதார அலுவலக வளாகத்தில் நெருக்கமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு ஆய்வக உதவியாளர் பணிக்கு வந்தவர்களை அமர வைத்திருந்தனர். தவிர, இதே அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் காசநோய் பிரிவில் சூப்பர்வைசர் பணிக்கு நடந்த நேர்காணலுக்கு வந்த நபர்கள் அமர இருக்கை கூட அமைத்து கொடுக்கவில்லை. அவர்கள், கூட்டமாக நின்று நேர்காணலில் பங்கேற்றனர்.

நோய் பரப்பும் வகையில் நேர்காணல் நடந்துள்ளதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், கொரோனா பரவல் தடுக்க கட்டுப்பாடுகளை விதித்து, அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகளே கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் நேர்காணல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Health Department Office , In the health office Interview on the spread of the disease: the negligence of the authorities
× RELATED பலமநேர் மண்டலத்தில் விவசாய பரோசா,...