பெரம்பலூர் மாவட்டத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் உள்பட 6 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் உள்பட 6 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது எனப்படும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியராக பணிபுரிந்து இந்திய நாட்டின் மிக உயர் பதவியான ஜனாதிபதி பதவியை வகித்த டாக்டர்.ராதாகிருஷ்ணனை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும் மத்திய, மாநில அரசுகளால் அவரது பிறந்த நாளான செப்.5ம் தேதியன்று, தேசிய, மாநில நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருது பெறுவோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அளவில், வேப்பந்தட்டை ஒன்றியம், எறையூர் நேரு அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை அபிராமசுந்தரி, பெரம்பலூர் ஒன்றியம், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமாவதி, ஆலத்தூர் ஒன்றியம், தெரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருஞானசம்மந்தம் ஆகியோருக்கும். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் அளவில், பெரம்பலூர் ஒன்றியம் அம்மாப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராமர், வேப்பூர் ஒன்றியம், எழுமூர் அரசு உயர் நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை ஜெயா, ஆலத்தூர் ஒன்றியம், அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் புகழேந்தி ஆகியோர் மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பாக ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப் பதக்கம் மற்றும் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடை காரணமாக, கடந்த ஆண்டைப்போலவே சென்னையில் வழங்கப்படாமல், இந்த ஆண்டும் செப்.5ம் தேதியன்று, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில், அமைச்சர், எம்எல்ஏக்கள் முன்னிலையில் விருது வழங்கி கவுரவிக்கப்படவுள்ளது.

Related Stories: