நாகர்கோவிலில் இந்து சமய நூல்கள் அடங்கிய சித்ரா நூலகம் மீண்டும் திறப்பு: பொதுமக்கள், பக்தர்கள் வரவேற்பு

நாகர்கோவில்:  குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த போது, நாகர்கோவில் பாலமோர் ரோட்டில்  (தற்போதைய அண்ணா ஸ்டேடியம் அருகில்) திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பாலராமவர்மா மஹாராஜாவால், இந்து சமயம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டது. சித்ரா நூலகம் என அழைக்கப்பட்ட இந்த நூலகம் 50 சென்ட் நிலத்தில் இருந்தது. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பின், திருக்கோயில்கள் நிர்வாகத்தை கவனிக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நூலகம் சென்றது. பின்னர் உரிய பராமரிப்பின்றி நூலகம் மூடப்பட்டு கிடந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நாகர்கோவில் மாநகராட்சி இந்த நூலக இடத்தை கைப்பற்றி, மாநகராட்சிக்கு தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்துக்கான பாதை அமைக்க திட்டமிட்டது. இது தொடர்பாக அறநிலையத்துறை, மாநகராட்சி இடையே பனிப்போர் நீடித்தது. பின்னர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பால், மாநகராட்சி பின் வாங்கியது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாகர்கோவில் வந்த போது, இந்து சமய நூல்கள் அடங்கிய சித்ரா நூலகத்தை மீண்டும் திறந்து பராமரிக்க வேண்டும். வாசகர்களை அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சித்ரா நூலகத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். இதையடுத்து நூலகம் புதுப்பிப்பு பணிகள் நடந்தன. புதர்களை அகற்றி வர்ணம் பூசினர்.

தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்து, நேற்று நூலகம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. தினமும் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நூலகம் செயல்படும். வாரத்தின் திங்கட்கிழமை விடுமுறை ஆகும். ஆன்மிக சம்பந்தமான நூல்கள் உள்ளன. தொடர்ந்து ஆன்மிகம் தொடர்பாக பல நூல்கள் புதிதாக வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி வாசகர்கள் நூலகத்தில் உள்ள நூல்களை படித்து பயன் பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். சித்ரா நூலகம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதை இந்து அமைப்புகள், பக்தர்கள் வரவேற்றுள்ளனர். இது ெதாடர்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.5ஆண்டுகளுக்கு பிறகு இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: