×

பிளாட்பார பாதையை திறக்க கோரி காரைக்குடியில் ரயில் மறியல்

காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள  3வது பிளாட்பாரத்துக்கு பயணிகள் செல்வதற்கான பாதை இல்லை. இதனால் பயணிகள்  முதல் பிளாட்பாரத்தில் இருந்து ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை  கடந்து செல்கின்றனர். அதேபோல் பழைய ரயில்வே ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய  பாதையையும் ரயில்வே நிர்வாகம் அடைத்துள்ளனர். இதனை உடனடியாக  திறக்காவிட்டால் ரயில் மறியல் செய்ய போவதாக ஏஐடியூசி அறிவித்தது. இதை  தொடர்ந்து தாசில்தார், டிஎஸ்பி தலைமையில் அமைதிபேச்சுவார்தை நடத்தி ஒரு  வாரத்தில் கேட்டை திறப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இதன்படி ரயில்  மறியலை ஏஐடியூசி கைவிட்டது. ஆனால் 2 மாதங்கள் ஆகியும் இதுவரை ரயில்வே  கேட்டை திறக்கவில்லை.

இதனை கண்டித்து நேற்று காரைக்குடி ரயில் நிலையத்தில்  ஏஐடியூசி சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற ரயிலை மறித்து  போராட்டம் நடத்தினர். ஏஐடியூசி மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன் தலைமை  வகிக்க, நகர ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். இதில் மாநில குழு  உறுப்பினர் கண்ணன், செயலாளர் ராமராஜ், தலைவர் முருகன், ஆட்டோ சங்க தலைவர்  கணேசன், தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர்  காஜாமுகைதீன், கட்டட சங்க நகர செயலாளர் வேலாயுதம், துணைத் தலைவர் ஜான்,  கமிட்டி உறுப்பினர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் காரணமாக  ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன்  டிஎஸ்பி வினோஜி பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர்.

Tags : Karaikudi , Rail strike in Karaikudi demanding opening of platform
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!