×

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட களக்காடு தலையணை இன்று திறப்பு: திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல தடை நீடிப்பு

களக்காடு: 2ம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக களக்காடு தலையணை சுற்றுலா தலம் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி மூடப்பட்டது. இதுபோல திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலும் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. அதன் பின் கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்ட திருமலைநம்பி கோயில் யானைகள் நடமாட்டத்தால் கடந்த ஆகஸ்டு 1ம் தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வந்ததை அடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன, அதன்படி 4 மாதங்களாக மூடப்பட்டுள்ள தலையணை சுற்றுலா தலத்தையும், திருமலைநம்பி கோயிலையும் மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

 இதனிடையே களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  மூடப்பட்டுள்ள தலையணை சுற்றுலா தலம் தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வன பாதுகாவலர் அசோக் பிரித்தி உத்தரவின் பேரிலும், களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார் ஆலோசனையின் படி இன்று (4ம் தேதி) முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் அரசு விதித்துள்ள கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலையணைக்கு காலை 9 மணி முதல் மாலை 3-30 மணி வரை அனுமதி வழங்கப்படும். இதேபோல் திருக்குறுங்குடி வனப்பகுதிக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் திருமலை நம்பி கோயிலுக்கு செல்வதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்புகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள பொருட்களை சுற்றுலா பயணிகள் தொடுவதை தவிர்த்தால் நோய் தொற்றையும் தடுக்கலாம். நுழைவு கட்டணம் செலுத்தும் போது சரியான தொகையை கொடுக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர்களுக்கு ரூ 500 முதல் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Kalakadu , Kalakadu pillow closed due to corona threat opens today: Extension of ban on going to the temple depending on Thirumalai
× RELATED களக்காடு அருகே குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு