திருவள்ளூர் மாவட்டத்தில் 42.5 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் ஆவடி நாசர் பேட்டி

பூந்தமல்லி: கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம்களை அரசு அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி திருவேற்காடு நகராட்சியில் நேற்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் 12 இடங்களில் நடைபெற்றது. திருவேற்காடு கோலடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களிடம் கூறியதாவது, `தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 380க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் சுமார் 1091 முன்களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில்  50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 60 ஆயிரத்து 190 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 42.5 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் சராசரியாக 20 முதல் 23 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்துக்கு கடந்த ஆண்டும் தடை இருந்தது. அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. அப்போது கூட்டணியில் இருந்த பாஜ ஏதும் கேட்காமல் தற்போது மட்டும் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன,’ என்று கூறினார். இதில்,  பூந்தமல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி, பொறியாளர் நளினி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் லாவன்யா, நகர திமுக செயலாளர் மூர்த்தி, திமுக நிர்வாகிகள் ஏ.ஜே.பவுல், ஜெரால்டு, பிரபு கஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>