×

டெல்டா மாவட்டங்களில் 15 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய ஆணை நிராகரிப்பு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தமிழக  சட்டப் பேரவையில் நேற்று வனத்துறை, சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பண்ருட்டி வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசுகையில், ‘‘டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன்  திட்டம், ஓஎன்ஜிசி விரிவாக்க திட்டங்கள், வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட  பின்பும் தொடரும் என்று சொன்னால் விவசாயிகள் வாழ்வுரிமை  கேள்விக்குறியாகும்’’ என்றார். அமைச்சர் மெய்யநாதன்: அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ  கார்பன் கிணறுகள், கடலூர் மாவட்டத்தில் 5 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு  ஒன்றிய அரசு மூலம் அனுமதி கோரிய போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு  வாரியம் அந்த 15 கிணறுகளுக்கான ஆணையை நிராகரித்துள்ளது.

மயிலாடுதுறையில்  அஞ்சலா துறையில் ஓஎன்ஜிசி நிர்வாகம் அங்கு பணிகளை தொடங்கிய போது அதையும்  முதல்வர் தடுத்து நிறுத்தியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் உள்ள ஹைட்ரோ  கார்பன் கிணறுகளை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த  திட்டங்களை ரத்து செய்துவிட்டு முதல்வர் சொன்னது, ‘‘தமிழகத்தையும், டெல்டா  பகுதிகளையும் கண்ணை இமை காப்பது போல காப்பாற்றுவேன்’’ என்றார்.  வேல்முருகன்: வனத்துறையில், 10 ஆண்டு பணி முடித்த வேட்டை தடுப்பு  காவலர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும்.  

 அமைச்சர்  ராமச்சந்திரன்: வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களில், 10  ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதில், 1,119 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் பழங்குடியினர்  சமூகத்தை சார்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் 56 பேருக்கு பணி நியமனம் செய்து  அவர்கள் வனக்காவலர்களாக நியமிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள  1063 பேருக்கு தகுதியின் அடிப்படையில் விரைவில் பணி நிரந்தர ஆணை  வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

முதல்வரின் கண்காணிப்பில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்
தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலத்திற்கு காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதும் தணிப்பதும் பெரும் சவாலாக உள்ளது. 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி காலநிலை மாற்றங்கள் மற்றும் கணிப்பு நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையின் கீழ் “தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்க தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

அந்நிய களைச்செடிகள் அகற்றம்
அந்நிய களைத்தாவரங்களான உண்ணிச்செடிகள், சீமைகருவேல மரங்கள், சீகை போன்றவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூர் தாவர இனங்களுடன் கூடிய பரப்பினை அதிகரித்தல், உள்ளூர் தாவரங்களின் மறுஉற்பத்தி  மற்றும் வளர்ச்சி  என்று உள்ளுர் தாவரங்களை மீட்டெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கு வனப்பகுதிகளில் உள்ள அந்நிய களைச்செடிகளை அகற்றுவதற்கும், மேலாண்மை செய்வதற்கும் தனிக்கொள்கை வகுக்கப்பட உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Tags : Minister ,Meyyanathan , Delta District, Hydrocarbon Well, Minister Meyyanathan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...