பசுமை தமிழகம் திட்டம் செயல்படுத்தப்படும் முதல்வர் தலைமையில் தமிழ்நாடு ஈர நிலம் இயக்கம்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சட்டப்பேரவையில் வனத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதில் அளித்து பேசியதாவது: தமிழ்நாட்டில்  வன மற்றும் மரப்பரப்பினை 33 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்கு  சிந்தனையினை செயல்படுத்துவதற்கு வரும் ஆண்டுகளில் பசுமை தமிழகம் திட்டம்  செயல்படுத்தப்படும்.  10 ஆண்டுகளில் சுமார் 13.50 லட்சம் ஹெக்டேர்  பரப்பளவில் வனப்பகுதிக்கு வெளியே உள்ள அனைத்து வகையான நிலங்களிலும் சுமார்  261 கோடி மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை  செயல்படுத்துவதன் மூலம் ரூ.61 ஆயிரம் கோடி  வருவாய் அரசு மற்றும் மரம்  வளர்ப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

 தமிழ்நாடு ஈர நிலங்கள்,  நிலநீர் கழிவுகளின் சுத்திகரிப்பான்களாக விளங்கி நீராதாரத்தை  முறைப்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பதால் முதல்வர் தலைமையில் தமிழ்நாடு  ஈர நிலம் இயக்கம் ஏற்படுத்தப்படும். ஈர நிலங்கள் பழம்பெரும் பண்பாட்டில்  மிக்க முக்கியத்துவம் வகிப்பதால் குறைந்தது 100 ஈர நிலங்களை தேர்வு செய்து,  அவற்றின் இயற்கை சூழலை மீள உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக  ரூ.150 கோடி செலவிடப்படும்.  

 தமிழ்நாட்டில் மனித வன விலங்கு  மோதல்களால் பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகள் பாதிக்கப்படுவது காட்டு  பன்றிகளால் தான். இதற்கு தீர்வு காணும் வகையில் காட்டுப்பன்றியை வெர்மின்  வகையாக மாற்றம் செயது அளிக்கப்படுகின்ற காலத்தில் அரசு சட்ட  விதிகளுக்குட்பட்டு வனத்துறை அதிகாரிகள் மூலம் சுடுவதற்கு அல்லது  விவசாயிகளின் கோரிக்கையின் படி விவசாய நிலத்திலேயே காட்டுப்பன்றிகளை  அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.  மான், கரடி, மயில்கள் ஆகிய  விலங்குகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் புதிய வழிமுறைகளைக் கொண்டு  கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

More
>