×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் பியான்கா: ஸ்வியாடெக் முன்னேற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு தகுதி பெற்றுள்ளார்.இரண்டாவது சுற்றில் உள்ளூர் வீராங்கனை லாரென் டேவிசுடன் (27 வயது, 98வது ரேங்க்) மோதிய பியான்கா (21 வயது, 7வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 2வது சுற்றில் போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (20 வயது, 8வது ரேங்க்) 3-6, 7-6 (7-3), 6-0 என்ற செட் கணக்கில் பிரான்சின் பியோனா பெர்ரோவை (24 வயது, 74வது ரேங்க்) வீழ்த்தினார். நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெத்ரா குவித்தோவா, கரோலினா பிளிஸ்கோவா (செக்.), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), மரியா சக்கரி (கிரீஸ்), அஜ்லா டாம்ஜனோவிச் (ஆஸி.), எம்மா ரடுகானு (இங்கிலாந்து), அனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா), அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா (ரஷ்யா), ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஜோகோவிச் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (34 வயது, செர்பியா) 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை (25 வயது, 121வது ரேங்க்) எளிதில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்கள் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), ஜானிக் சின்னர், மேட்டியோ பெரட்டினி (இத்தாலி), கெய் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் 3வது சுற்றில் நுழைந்துள்ளனர்.சானியா ஏமாற்றம்: மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - கோகோ வாண்டெவெகே (அமெரிக்கா) ஜோடி 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் நடியா கிச்செனோக் (உக்ரைன்) - ரலுகா ஒலாரு (ருமேனியா) ஜோடியிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது.



Tags : Bianca ,US Open Tennis , US Open Tennis Bianca in 3rd round: Sviatech progress
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன்