×

ஐடா புயலால் பலி 45 ஆனது தத்தளிக்கும் நியூயார்க் : அவசர நிலை பிரகடனம்

நியூயார்க்:  அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐடா புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது நியூஅர்லியன்ஸ், நியூயார்க், நியூஜெர்சி, பிலடெல்பியா, கனெக்டிகட் ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கனமழை கொட்டி உள்ளது. கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில்வே சுரங்கப்பாதைகள் மூழ்கிவிட்டன. நியூயார்க் நகரில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர்.

மொத்த பலி எண்ணிக்கை தற்போது 45 ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, கனெக்டிகட் போன்ற பகுதிகளில் மக்கள் மழை வெள்ளத்திலும், இருளிலும் தத்தளிக்கின்றனர். புயலால் ஏற்பட்டுள்ள அசாதரண சூழலால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியிருக்கும் சூழலில் மின்சாரமும் மீட்க முடியாமல் உள்ளது. ஜோ பைடன் அரசுக்கு இது மிகப்பெரிய இயற்கை பேரிடர் சவாலாக அமைந்துள்ளது.புயல் பாதித்தப் பகுதி வாழ் மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். மேலும் இன்று அவர் புயல் தாக்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யவிருக்கிறார்.

இது இயற்கையின் எச்சரிக்கை
சமீபத்தில் சீனாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. மறுபுறம் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ பல வனப்பகுதியை தீக்கிரையாக்கியது. தற்போது, அடிக்கடி புயல்கள் வருகின்றன. முன்பைவிட மிகுந்த வலிமையுடன் தாக்குகின்றன. பருவநிலை மாறுதல் தான் இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். நியூயார்க் நகரமே இன்று நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதன் மூலம், புவிவெப்பமயமாதலின் தாக்கத்தை நாம் உணர்ந்து விழித்துக் கொள்ள வேண்டுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.




Tags : Ida ,storm ,New York , The death toll from Hurricane Ida has risen to 45 Stuttering New York: State of emergency declared
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்