ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது டெல்லி சட்டசபையில் இருந்து செங்கோட்டை வரை சுரங்கப்பாதை: அடுத்த ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

புதுடெல்லி: இந்தியாவின் தலைநகராக 1912ம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து டெல்லியை ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். இதையடுத்து அங்கு அனைத்து விதமான நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டன. சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அமைந்த இடத்தில் தான் தற்போது டெல்லி சட்டசபை அரங்கம் உள்ளது. இந்த நீதிமன்ற அரங்கம் 1926ம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. தற்போது அமைந்துள்ள சட்டசபையில் மத்திய அரங்கில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை அங்கிருந்து செங்கோட்டை வரை செல்கிறது.

சுதந்திர போராட்ட வழக்கில் வீரர்களை கைது செய்து தற்போது சட்டசபையாக செயல்படும் அப்போதைய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது மக்கள் பிடியில் இருந்து தப்பிக்க ஆங்கிலேயர்கள் இந்த சுரங்கப்பாதை வழியை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த தகவலை டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ்கோயல் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘‘2016ல் இந்த சுரங்கப்பாதை கண்டறியப்பட்டது. அதை மேற்கொண்டு தோண்டுவதற்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் மெட்ரோ ரயில் பாதைக்காகவும், கழிவுநீர் கால்வாய் பணிக்காவும் அனைத்து சுரங்கப்பாதைகளும் சேதப்படுத்தப்பட்டு இருக்கலாம். டெல்லி சட்டசபை வளாகத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையுடன் மரண தண்டனை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட அறையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 26 அல்லது ஆகஸ்ட் 15ல் பொதுமக்கள் பார்வைக்கு சுரங்க பாதை மற்றும் மரண தண்டனை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்ட அறை திறந்து விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>