×

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவிகள் பயின்ற வகுப்பறைகளை பூட்டிய சுகாதாரத்துறையினர், சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து, வாரத்தில் 6 நாட்கள் சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில்  அனைத்து பள்ளிகளிலும் முதல்நாளில் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.

 ஒரு சில மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் நடந்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று காலை, பள்ளிக்குச் சென்ற மருத்துவ குழுவினர், அனைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதேபோல், மாணவி படித்த வகுப்பறை மூடப்பட்டு, அவருடன் படித்த சக மாணவிகள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல், பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

2 ஆசிரியைக்கு தொற்று
நெய்வேலி என்எல்சி நிறுவன பகுதியில் இயங்கி வரும் ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பரிசோதனை முடிவு நேற்று வந்தது.அதில் எந்த விதமான அறிகுறியும் இல்லாத இரண்டு ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் என்எல்சி பொது மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.




Tags : Corona ,Namakkal , In Namakkal district Government school students Corona for 3 people
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...