போட்டியின்றி எம்.பி.ஆனார் எம்.எம்.அப்துல்லா : மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்வு!!

டெல்லி: திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தப்பட்ட எம்.எம் அப்துல்லா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் காலமானார். எனவே, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில், திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா மற்றும் சுயேச்சை வேட்பாளர்களாக ந.அக்னி ஸ்ரீராமச்சந்திரன், கு.பத்மராஜன், கோ.மதிவாணன் ஆகிய 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததையொட்டி சட்டமன்ற பேரவை செயலாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீது பரிசீலினை நடைபெற்றது. ஒரு வேட்பாளரை 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும் என்பதால் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லாவின் வேட்பு மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக திமுக வேட்பாளர் அப்துல்லா போட்டியின்றி தேர்வானதாக அதிகாரப்பூரமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசன் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதற்கான சான்றிதழையும் அப்துல்லாவிடம் வழங்கினார்.அப்துல்லாவுடன் மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, ஐ. பெரியசாமி, பொன்முடி, கே.என். நேரு ஆகியோர் உடன் இருந்தனர். 1993ம் ஆண்டு முதல் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் எம்.எம்.அப்துல்லா.எம்.எம்.அப்துல்லா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.  

Related Stories: