×

தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் இல்லை; அதிமுக ஆட்சியில் வீழ்ச்சியை சந்தித்த அரசு ரப்பர் கழகம்: மீட்டெடுக்க ஆலோசனை குழு அமைக்க வலியுறுத்தல்

நாகர்கோவில்: அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வீழ்ச்சியை சந்தித்த தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்தை அழிவுப்பாதையில் இருந்து மீட்டெடுக்க ஆலோசனை குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் 12,000 எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இரு பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பயறு வகைகள் சுமார் 900 எக்டரில் நஞ்சை தரிசில் சாகுபடி செய்யப்படுகிறது. வாழை 6305 எக்டரிலும், தென்னை 23,988 எக்டர் பரப்பிலும் பணப்பயிரான ரப்பர் சுமார் 26,810 பரப்பிலும் சாகுபடி செய்யப்படுகிறது.  ரப்பர் சாகுபடியை மேம்படுத்த அரசு ரப்பர் கழகம் உருவாக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் அரசு ரப்பர் கழகம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நிர்வாக சீர்கேடுகள், அதிகாரிகளின் அலட்சியம், பெருமளவு நிதி முறைகேடுகள் என எல்லா வகையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தி வழங்கப்படும் சம்பள உயர்வு அடுத்த ஊதிய உயர்வு ஒப்பந்தகாலம் முடிந்த பின்னர் கூட வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம்a700 கிடைக்கின்ற அளவிற்கு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

போதிய ஊதியம் இல்லாததால் தொழிலாளர்கள் தங்கள் குடும்ப செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு ரப்பர் கழக அனைத்து தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கள் உயிரைப்பொருட்படுத்தாமல் மருத்துவ துறைக்கு தேவையான ரப்பர் பாலை தொடர்ந்து உற்பத்தி செய்து வந்தார்கள். தற்போது கன்னியாகுமரி வன கோட்டம் வன உயிரின காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அரசு ரப்பர் தோட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் பயிரிடப்படும் ரப்பர் கன்றுகள் யானைகளால் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பும் தொடர்கிறது.

அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் சரியாக செய்யாமல் உள்ளதால் இப்பிரச்னை தொடர்கிறது. இதற்கு நிர்வாகத்தின் அலட்சியம், முறைகேடுகளும் காரணமாக அமைந்துள்ளது. இதனால் ரப்பர் தோட்டங்கள் மறு உருவாக்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு ரப்பர் கழகத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இதனால் இழப்பு ஏற்படுகிறது. இங்குள்ள களப்பணியாளர்கள் வன விலங்குகளை கையாளும் எவ்வித பயிற்சியும் இல்லாதவர்கள் என்பதால் மன ரீதியாக விலங்குகளை எதிர்கொண்டு ரப்பர் தோட்டங்கள் உருவாக்க இயலாதவர்களாக உள்ளனர்.

அரசு ரப்பர் கழகத்திற்கு உயர் அதிகாரிகள் நியமிக்கப்படும்போது வனத்துறையில் புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்லது அங்கு ஏதேனும் பிரச்னைகளில் சிக்கியவரை இங்கு பணியமர்த்தும் நடைமுறை இருந்து வருகிறது. அதனால் அவர்கள் இங்கு வந்து சரியாக நிர்வாகம் நடத்துவது இல்ைல என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்து அரசு ரப்பர் கழகத்தை காக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரே பொதுத்துறை நிறுவனமான அரசு ரப்பர் கழகம் அழிந்துபோகாமல் மீட்டெடுத்திட அரசு ரப்பர் கழகத்திற்கு ஒரு ஆலோசனை குழுவினை நியமிப்பதுடன் அதில் வனத்துறை உயர் அதிகாரிகள், தனியார் ரப்பர் தோட்ட நிர்வாகிகள், மத்திய அரசின் ரப்பர் வாரிய அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகளை இணைத்து அந்த குழுவின் ஆலோசனைகளை கேட்டுபெற்று நிர்வாகத்தை மேம்படுத்த போதிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
இது தொடர்பாக ஐ.என்.டி.யு.சி குமரி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது: அரசு ரப்பர் கழக தோட்டங்களில் உற்பத்தி ஆகும் பச்சை பால் கீரிப்பாறை தொழில் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்ட பின்னர் பேரல்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இங்குதான் அரசு ரப்பர் கழகத்தின் அழிவும், ஊழல் முறைகேடுகளும் தொடங்குகிறது. பால் விற்பனையில் முறைகேடு நடைபெறுவதாக இங்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மீது தொழிற்சங்கங்கள் தொடர்ந்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

மயிலார், கீரிப்பாறை தொழில் கூடத்திங்களிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் இது தொடர்பாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். அரசு ரப்பர் கழகம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் செயலாக்கம் உள்ள இளம் வனத்துறை அதிகாரிகளை எம்.டி, ஜி.எம் ஆக நியமிக்க வேண்டும். அல்லது இளம் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் குறிப்பிட்ட காலத்தில் முடிவு செய்து தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து 15 ஆண்டுகள் தற்காலிக தொழிலாளர்களாக வேலை பார்த்து வரும் பால் வடிப்பு தொழிலாளர்கள் மற்றும் களப்பணி தொழிலாளர்களை அரசு ரப்பர் கழகத்தில் உள்ள காலியிடங்களில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ரப்பர் கழக அனைத்து பணியிடங்களிலும் ரேஞ்சர், பாரஸ்டர், உதவி வன பாதுகாவலர் மற்றும் பதிவு அலுவலகம் மற்றும் கோட்ட மேலாளர் அலுவலகங்களில் புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : State Rubber Corporation ,AIADMK , There are no wage increases for workers; State Rubber Corporation collapses under AIADMK rule
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...