×

யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: 3வது சுற்றில் ஜோகோவிச், கெர்பர்

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 3ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் கெர்பர், ஆண்ட்ரீஸ்கு ஆகியோரும் 2ம் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இன்று அதிகாலை ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் நடந்த 2ம் சுற்றுப்போட்டியில் இளம் வீரரான நெதர்லாந்தை சேர்ந்த டால்லன் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார். இந்த காலண்டர் வருடத்தின் 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற இலக்குடன் ஆடி வரும் ஜோகோவிச், இப்போட்டியில் மிகவும் எளிதாக 6-2, 6-3, 6-2 என நேர் செட்களில் கிரீக்ஸ்பூரை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பான் வீரர் கீ நிஷிகோரி, இன்று அதிகாலை நடந்த 2ம் சுற்றுப்போட்டியில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டுடன் மோதினார். முதல் செட்டை டைபிரேக்கரில் போராடி கைப்பற்றிய நிஷிகோரி, அடுத்த செட்டை எளிதாக வசப்படுத்தினார். ஆனால் 3வது செட்டை டைபிரேக்கரில் வென்ற மெக்டொனால்ட் 4வது செட்டை எளிதாக கைப்பற்றி, நிஷிகோரியை மிரட்டினார்.

இருப்பினும் 5ம் செட்டில் அவர் முழுவதுமாக சரணடைந்து விட்டார். இதையடுத்து இப்போட்டியில் நிஷிகோரி 7-6, 6-3, 6-7, 2-6, 6-3 என 5 செட்களில் ஒருவழியாக வென்று, 3ம் சுற்றுக்கு முன்னேறினார். 3ம் சுற்றில் அவர் ஜோகோவிச்சுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ், இத்தாலி வீரர்கள் ஜான்னிக் சின்னர், மாட்டியோ பெரட்டினி மற்றும் கனடாவின் இளம் வீரர் டெனிஸ் ஷபோவலோவ் ஆகியோரும் 2ம் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் 2ம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனி நட்சத்திரம் ஆங்கிலிக் கெர்பர், உக்ரைன் வீராங்கனை ஆன்ஹெலினா காலிநினாவை 6-3, 6-2 எ ன நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி, 3ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். யு.எஸ். ஓபன் முன்னாள் சாம்பியன் கனடாவின் பினாகா ஆண்ட்ரீஸ்கு, அமெரிக்காவின் லாரன் டேவிசை 6-4, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தினார். அமெரிக்க வீராங்கனைகள் ஜெசிகா பெகுலா, ஷெல்பி ரோஜர்ஸ் ஆகியோரும் 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

சானியா தோல்வி

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் கோகோ வாண்டேவேக் ஜோடி, ருமேனியாவின் ராலுகா ஒலாரு-உக்ரைனின் நாடியா கிச்சநோக் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா-வாண்டேவேக் ஜோடி 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

Tags : US Open Grand Slam ,Djokovic ,Gerber , US Open Grand Slam tennis: Djokovic, Gerber in 3rd round
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!