புதிய பந்தில் டாப் ஆர்டர் வீரர்கள் பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது: ஷர்துல் தாகூர் பேட்டி

லண்டன்: இங்கிலாந்து-இந்தியா அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருக்க 4வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்தியா வழக்கம் போல் சரிவை சந்தித்தது. ரோகித்சர்மா 11, கே.எல்.ராகுல் 17 ரன்னில் ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த புஜாரா 4 ரன்னில் நடையை கட்டினார். ரகானேவுக்கு முன்னதாக களம் இறங்கிய ஜடேஜாவும் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 10 ரன்னில் வோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். சற்று பொறுப்பாக ஆடிய விராட் கோஹ்லி 50 ரன் எடுத்த நிலையில் ராபின்சன் பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சொதப்பினாலும் நிர்வாகத்தின் கருணையால் அணியில் தனது இடத்தை தக்க வைத்துள்ள ரகானே 14 ரன்னிலும், ரிஷப் பன்ட் 9 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். 127 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 31 பந்தில் அவர் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார்.

இதனால் இந்தியா 150 ரன்னை தாண்டியது. தாகூர் 57 ரன் (37 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்திருந்த போது வோக்ஸ் பந்தில் எம்பிடபிள்யூ ஆனார். அடுத்த 3 பந்தில் (பும்ரா 0, உமேஷ் 10 ரன்) ஆகியோர் விக்கெட்டை இழந்து 61.3 ஓவரில் இந்தியா 191 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4, ராபின்சன் 3, ஆண்டர்சன், ஓவர்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணிக்கு பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். இவர் வீசிய 4வது ஓவரின் 2வது பந்தில் ரோரி பர்ன்ஸ் 5 ரன்னில் போல்டானார். கடைசி பந்தில் ஹசீத் ஹமீத் (0) பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் டேவிட்மலனுடன், ஜோரூட் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக 25 பந்தில் 21 ரன் எடுத்த ரூட் உமேஷ்யாதவ் பந்தில் போல்டானார். தொடர்ந்து சதங்களாக விளாசி வந்த அவர் இந்த முறை விரைவிலேயே வீழ்ந்ததால் இந்திய அணியினர் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன் எடுத்திருந்தது. டேவிட் மலன் 26, ஓவர்டன் 1 ரன்னில் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வீரர் ஷர்துல்தாகூர் அளித்த பேட்டி: காலையில் மேகமூட்டமாக இருந்தது வேகப்பந்து வீச்சுக்கு உதவியது. இதுபோன்ற நிலையில் புதிய பந்துக்கு எதிராக பேட் செய்வது கடினம். டாசையும் இழந்த நிலையில், எங்கள் டாப் ஆர்டர் வீரர்கள் பேட்டிங் செய்வது சவாலாக இருந்தது. நான் பேட்டிங் செய்ய சென்றபோது பன்ட் களத்தில் இருந்தார். அவர் எப்போதுமே எல்லோருக்கும் தெரியும் கிரிக்கெட்டின் தாக்குதல் பிராண்டை விளையாடுவார். எனவே அவர் பேட்டிங் செய்யும் வரை, தடுப்பாட்டத்தில் ஈடுபடுவது, அவர் வெளியேறியவுடன், என்னால் முடிந்தவரை ரன் எடுக்க முயற்சிப்பது தான் என் பங்கு என்பது தெளிவாக இருந்தது. கடந்த 2 டெஸ்ட்டை நான் தவறவிட்டேன், ஆனால் நான் வேகத்தை இழக்காமல் இருக்க வலைகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை உறுதி செய்தேன்.

தொடர் தொடங்குவதற்கு முன்பே நான் நன்றாக தயாராகிவிட்டன், முதல் ஆட்டத்திற்கு பிறகு துரதிருஷ்டவசமாக நான் காயமடைந்தேன். ஆனால் நான் வலைகளில் பேட் செய்வதை உறுதி செய்தேன், எனது பேட்டிங் பயிற்சியாளர் என்னால் அடித்து ஆடி ரன் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தார். அதன்படி நான் இன்று விளையாடினேன். இங்கிலாந்து அணியினர் 3 விக்கெட்டை இழந்துவிட்டனர், அவர்களின் பார்ம் பேட்ஸ்மேன் (ரூட்) அவுட் ஆகிவிட்டார், அவர்களை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த எங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன், என்றார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் கூறுகையில், ``நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். காயம் இன்றி விளையாடி இருந்தால் அணியின் ஆடும் லெவன் தேர்வில் முதல் ஆளாக இருந்திருப்பேன். இன்று இந்தியாவை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியதில் மகிழ்ச்சி. இன்று நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என நம்புகிறேன். நல்ல முன்னிலை பெற்று மீண்டும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: