×

தோகைமலை பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கலெக்டர் அதிரடி ஆய்வு

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். நேற்று காலை தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் வகுப்பறைக்கு சென்று மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடினார். அப்போது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிக்கு வந்தது எப்படி உள்ளது, கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்று மாணவர்களிடம் கேட்டார். பின்னர் இடைவெளி விட்டு அமருதல், முகக்கவசம் அணிதல், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல், இல்லத்தில் உள்ள தகுதிவாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்ட பிறகு, மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தலைமை ஆசிரியர் வளர்மதிக்கு உத்தரவிட்டார். இதேபோல் காவல்காரன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் பிரபுசங்கர், அங்கு பள்ளியில் நட்டு பராமரித்து வரும் பல்வேறு மரங்களின் பசுமையை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் வகுப்பறைளுக்கு சென்று மாணவர்களின் நோட்டுகளை ஆய்வு செய்து கேள்விகள் கெட்டார். அதனை தொடர்ந்து மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு சென்று அங்கு தண்ணீர் வசதி, பெண்களுக்கான நாப்கின் வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தார். மேலும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்த பள்ளி சுற்றுசுவர் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் அமைத்து கொடுக்க உறுதி அளித்தார்.

இதேபோல் ஆர்டிமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் பிரபுசங்கர் அங்கு மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடம் கவனிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது பெண்களுக்கான பள்ளியை தனியாக பிரித்து சென்றபோது பெஞ்ச் டெஸ்க்குகளையும் எடுத்து சென்றனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்ப பெஞ்ச் டெஸ்க்குகள் பற்றாகுறையாக உள்ளது என்று கலெக்டரிடம் தெரிவித்தார்.

7 ஆண்டுகளாக பற்றாக்குறையாக உள்ள பெஞ்ச் டெஸ்க்குகள் பெறுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் எப்படி மாணவர்களை தரையில் அமர வைக்கலாம் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கலெக்டர் கூறினார். மேலும் சத்துணவு சமையல் கூடத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு அரிசியை நன்றாக சுத்தம் செய்யாமல் சமைத்து இருந்ததையும், முட்டை குறைவாக இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சமைக்கப்பட்டு இருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்த கலெக்டர் மனவேதனை அடைந்தார். இதனால் சத்துணவை நன்றாக சமைக்குமாறு அறிவுரை வழங்கினார்.


பெற்றோர்களுக்கு தடுப்பூசி போட மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு

ஆய்வுகளுக்கு பிறகு கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு தற்போது பள்ளிகளை திறந்து உள்ளது. இதில் ஒரு மாணவர்களுக்குக்கூட கொரேனா தொற்று ஏற்படக்கூடாது என்று தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களை கொண்டு தடுப்பூசி செலுத்தாத அவர்களின் பெற்றோர்கள் மற்றும் தகுதி வாய்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags : Tokaimalai , Tokaimalai: District Collector Prabhusankar inspected government high schools in Tokaimalai area of Karur district.
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு