முழுகொள்ளளவை எட்டியதால் மருதாநதி அணையில் உபரி நீர் திறப்பு

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை தொடர்ந்து 6 மாதமாக முழுக்கொள்ளவுடன் தண்ணீர் உள்ளது. அணை கட்டிய நாளிலிருந்து இத்தனை மாதங்கள் முழு கொள்ளவுடன் தண்ணீர் இருப்பு இருந்ததில்லை என கூறப்படுகிறது. தொடந்து அணைக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதிகளில் மலைப்பகுதிகளில் விட்டு விட்டு பெய்துவரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் தொடந்து முழுகொள்ளவுடன் உள்ளது.

அணைக்கு தற்போது 30 கன அடி வீதம் தண்ணீர் தற்போது வரத்து வந்து கொண்டிருக்கின்றது. அணையின் மொத்த உயரம் 74 அடியாகும்.ஆனால், 72 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்ற காரணத்தினால், அணையில் 72 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். எனவே, அணையின் பாதுகாப்புக் கருதி, அணையிருந்து அணைக்கு வரும் 30 கன அடி தண்ணீர் பிரதான வாய்க்காலில் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் தற்போது 190 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது.

இந்த அணை தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பயன்பெறுகின்றன. மேலும் இந்த அணை மூலமாக பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி போன்ற 3 பேரூராட்சிகளும், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி போன்ற 3 ஊராட்சிகளுக்கும் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அணை தொடர்ந்து முழு கொள்ளவுடன் உள்ளதால், இந்த அணையை சுற்றியுள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் தென்னை,மா,முந்திரி, இலவம்பஞ்சு போன்ற விவசாயம் நடைபெறும் விவசாய தோட்டங்களில் தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. தற்போது அணை நிரம்பி தண்ணீர் அணையிலிருந்து திறந்துவிடப்படுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணை தொடந்து முழு கொள்ளவில் உள்ளதால், அணையின் நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

>