கொரோனா பரவல் எதிரொலி கேரளா செல்லும் மாற்று பாதை அடைப்பு-வருவாய்துறை நடவடிக்கை

பந்தலூர் : கொரோனா பரவல் காரணமாக பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் கேரளாவிற்கு செல்லும் மாற்றுப்பாதையை வருவாய் துறையினர் அடைத்தனர்.

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக அனைத்தும் மூடப்பட்டிருந்தநிலையில் தொற்று குறைந்ததால் செப்.1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதித்து அனுமதி அளித்தது.

அதன்படி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பந்தலூர் அருகே கேரள, தமிழக எல்லைப்பகுதியில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் பலர் கேரளாவில் இருந்து தினமும் தமிழக எல்லைப்பகுதியில் இருக்கும் தாளூர் மற்றும் எருமாடு, சேரம்பாடி, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளில் பணிபுரிய வந்து செல்கின்றனர்.

இதனால், பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்கி வருவதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் நேற்று பந்தலூர் தாசில்தார் குப்புராஜ் தமிழக எல்லைப்பகுதியான தாளூர் சோதனைச்சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டார். கொரோனா பரிசோதனை செய்யாமல் கேரளாவில் இருந்து வரும் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். மேலும், தாளூர் அருகே கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் குனில் பகுதியில் இருக்கும் மாற்றுப்பாதையை தகரம் வைத்து அடைக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு நடைபெறும் என தாசில்தார் குப்புராஜ்  தெரிவித்தார்.

Related Stories:

>