×

4 மாதங்களுக்கு பிறகு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை கூடியது-வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பு

ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நான்கரை மாதங்களுக்கு பிறகு நேற்று கூடியது. முதல் நாள் என்பதால் சொற்ப அளவிலான மாடுகளே வரத்தானது.ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டு சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதி மட்டும் அல்லாது நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர்.

அதேபோல், இங்கு வரத்தாகும் மாடுகளை கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்வர். கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்., 15ம் தேதிக்கு இந்த சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையினை மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து நேற்று முதல் நடத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதன்பேரில், நான்கரை மாதங்களுக்கு பிறகு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று முதல் செயல்பட துவங்கியது. முதல் நாள் என்பதால் சொற்ப அளவிலான மாடுகளே வரத்தானது. அதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில வியாபாரிகள் யாரும் நேற்றைய சந்தைக்கு வரவில்லை. இதனால், மாடுகள் விற்பனையும் மந்தமாக காணப்பட்டது.

வாகனங்களுக்கு கிருமி நாசினி  

கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் கோபி, சத்தி, தாளாவடி, கொடுமுடி, சிவகிரி போன்ற பகுதிகளில் இருந்தும், நாமக்கல், கரூர் போன்ற சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, சந்தையின் நுழைவு வாயிலில் மாட்டு சந்தை பணியாளர்கள் வாகனங்களின் டயர்களுக்கும், வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்தனர். அதேபோல், வியாபாரிகள், வாகன டிரைவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். அதேபோல், மாட்டு சந்தையில் ஆங்காங்கே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பேனர்களும், 5 நிமிடத்திற்கு ஒரு முறை ஒலிபெருக்கி மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு வாசங்களும் தொடர்ந்து ஒலிக்க செய்தனர்.

ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டியில்  நேற்று நடந்த கால்நடைச் சந்தைக்கு 40 எருமைகள், 600 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர்.
 
எருமைகள் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையிலும்,  கறுப்பு வெள்ளை மாடு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரையிலும், ஜெர்சி ரூ.23 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரையிலும், சிந்து ரூ.15 ஆயிரம் முதல் ரூ.39 ஆயிரம் வரையிலும், நாட்டுமாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.69 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ.5000 முதல், ரூ.14 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு விற்பனையானது.

மாநகராட்சி அதிகாரிகள்,கால்நடைமருத்துவர்கள் ஆய்வு

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வரத்தாகும் மாடுகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதா?, என்பதை கண்டறியவும், மாடுகளின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்யவும் கால்நடை பராமரிப்புத்துறையின் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அதேபோல், சந்தையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.

சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கரை மாதங்களாக சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் சந்தை திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மொத்தமே 150 மாடுகளே வரத்தானது. முதல் நாள் என்பதால் நிறைய விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சந்தை குறித்த தகவல் சென்றிருக்காது. அடுத்த வாரம் கூடுதலாக மாடுகள் வரத்தாகும் என எதிர்பார்க்கிறோம். சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. சந்தையில் முக கவசம் அணிந்தவர்களையும், தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்ற சான்றிதழை பெற்றே உள்ளே அனுமதிக்கிறோம், என்றார்.

Tags : Black Hat Cow Market , Erode: The Erode Blackstone Cattle Market met yesterday after four and a half months following the Corona Guidelines. First
× RELATED சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது...