திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரையில் கல்லூரி மாணவர்கள் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரையில் கல்லூரி மாணவர்கள் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேற்று முன்தினம் முதல் செயல்பட ெதாடங்கி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா விழிப்புணர்வு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி, பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படுகிறதா என கடந்த 2 நாட்களாக கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.அதன்படி, திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் நேற்று கலெக்டர் பா.முருகேஷ் நேரடி ஆய்வு நடத்தினார். அப்போது, கல்லூரி மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும், கல்லூரி வகுப்பறைகளை பார்வையிட்ட கலெக்டர், தனி நபர் இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும், எந்த நிலையிலும் முகக்கவசம் அணிவதை தவிர்க்கக்கூடாது என அறிவுரை வழங்கினார்.அதோடு, அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் தூய்மை செய்து கொள்ள வேண்டும். அதற்கான வசதியை ஒவ்வொரு வகுப்பறையிலும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பாதுகாப்பு கவசமாகும். கல்லூரி மாணவர்கள் அனைவரும் 18 வயதை கடந்திருப்பதால், தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்ததாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் உட்பட மொத்தம் 56 கல்லூரிகள் உள்ளன. அதில், இளநிலை பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் 12,217 மாணவர்களும், மூன்றாம் ஆண்டில் 12,816 மாணவர்களும் படிக்கின்றனர். அதேபோல், முதுநிலை பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் 1,958 மாணவர்கள் படிக்கின்றனர்.

மொத்தமுள்ள 26,987 மாணவர்களில், இதுவரை சுமார் 16 ஆயிரம் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல், மொத்தமுள்ள 3,700 பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்களில்  3550 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.நூறு சதவீதம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்லூரி வளாகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>