×

அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: அதிரடி உத்தரவை பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்..!

சென்னை : அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது.

கோயில்களில் விதிக்கப்படும் ஆகம விதிகளின் படிதான் அர்ச்சனை செய்ய வேண்டும், மத காரியங்களை செய்ய வேண்டும் என்று ரங்கராஜ நரசிம்மன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்தகைய மத விவகாரங்களில் அரசு தலையிட கூடாது எனவும் வழக்கு வாதங்களில் தெரிவித்திருந்தார்.

இதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.ஏனென்றால் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்று 2008ம் ஆண்டு வேறு ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதை சுட்டிக்காட்டி அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது எனக்கூறி அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Chennai High Court , Tamil Archanai, Chennai High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...