×

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பாசி மாலை விற்பனைக்கு குவிந்த வியாபாரிகள்

உடன்குடி: குலசேகரன்பட்டினம்  தசரா திருவிழாவையொட்டி சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் பாசி மாலை  விற்பனையாளர்கள் குவிந்து வருகின்றனர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள்  வந்து செல்வதால் பாசிமாலை விற்பனை ஜோராக நடந்து வருகிறது. மைசூருக்கு  அடுத்தபடியாக தசரா திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயில் ஆகும். இந்த ஆண்டு தசரா திருவிழா  அக்.6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்.15ம் தேதி நள்ளிரவு  சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் விரதம் தொடங்கி உள்ளனர்.

தசரா திருவிழாவில் கடும் விரதம்  மேற்கொள்ளும் பக்தர்கள் 61, 41, 21, 11 நாட்கள் என அவரவர் சூழலுக்கு  தகுந்தாற்போல் விரதம் இருப்பர். விரதம் மேற்கொள்ளும் நபர்கள்  குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை  பகுதியில் விற்பனை செய்யப்படும் பாசி மாலைகளை வாங்கி கடல் நீரில் கழுவி அம்மன்  பாதத்தில் வைத்து கழுத்தில் அணிந்து கொள்வர். தற்போது கொரோனா தொற்று பரவல்  காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் பக்தர்கள்  கோயில் வெளிப்பிரகார மண்டபத்தில் வைத்து சாமி கும்பிட்டு தங்களுக்குத் தாங்களே மாலை அணிவித்தும், வயதில் மூத்த பெரியோர், சிறுகுழந்தைகளிடம்  கொடுத்தும் மாலை அணிந்து கொண்டு வருகின்றனர்.

தசரா திருவிழாவையொட்டி பாசி  மாலை விற்பனை செய்ய நெல்லை, வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நரிக்குறவர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து தங்கியுள்ளனர். ரூ.30 முதல் ரூ.350 வரை மாடல், மாடலாக பாசிகள்  விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுளளது. சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பிருந்து  கடற்கரை வரை பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்கள் தங்களது  குடும்பத்துடன் குவிந்து காணப்படுகின்றனர். அந்த பகுதியிலேயே குடில்  அமைத்தும் அல்லது பாசி மாலையை தொங்க விட்டிருக்கும் நிழலிலேயே இருந்தும்  கடுமையான விரதம் மேற்கொண்டு பாசி மாலையை தயாரித்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளதால் பாசி மாலைகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.



Tags : Kulasekranpantnam Dharara Festival , Kulasekaranpattinam Dasara Festival: Merchants gathered for the sale of moss garlands
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!