கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு!: எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனு இன்று பிற்பகலில் விசாரணை..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடைபெற இருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு ஓம்பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி.முரளி, அதிமுக நிர்வாகி சஞ்சீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளிப்பதாகவும், மற்றவர்களை விசாரிக்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கடந்த ஏப்ரலில் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில், முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் நடைபெற்ற கொள்ளையில் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை? எவை? என்று சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும் புலன் விசாரணை குழு தேவையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனு இன்று பிற்பகல் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வருகிறது.

Related Stories: