×

மருத்துவக் கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: மருத்துவக் கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்த மானியக்கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசு, மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவு  தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூன் 5ம் தேதியன்று ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக்குழு ஒன்று அமைத்தார்.

அந்த உயர்மட்டக்குழு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை அடிப்படையாகக் ெகாண்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக, பொருளாதார மற்றும் கூட்டாட்சி முறையினை மோசமாக பாதிக்கிறதா என்பதையும்; மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை- எளிய மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் அல்லது வேறு பிரிவு மாணவர்களை பாதிக்கிறதா என்பதையும், அவற்றை களைய எடுக்கப்பட வேண்டிய தகுந்த முன்ெனடுப்பு நடவடிக்கைகள் குறித்து தகுந்த ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை கடந்த ஜூலை 14ம் தேதியன்று அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.

உயர் மட்டக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமை செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மருத்துவக் கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புறந்தள்ளுவதற்கு தமிழ்நாடு மாநில சட்டம் 3/2007-னைப் போன்றதொரு புதிய சட்டத்தினை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்தது. இது மருத்துவக் கல்வி சேர்க்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவச் சமுதாயத்திகான சமூகநீதியை பாதுகாப்பதை உறுதி செய்யும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Ma Subramaniam , At all levels of medical education admission New law against NEET exam: Minister Ma Subramaniam's announcement
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...