முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க சென்னை தலைமை செயலகம் முன்பு அதிகாலை 2 மணிக்கே 500 பேர் காத்திருப்பு: புகார் மீது உடனே பலன் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில், தனிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மனுக்களை வாங்கி உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார். இதனால், தமிழகம் முழுவதிலும் இருந்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை கொடுத்துவிட்டு நம்பிக்கையுடன் செல்கின்றனர்.அதேநேரம் டிஜிபி சைலேந்திரபாபு, முதலமைச்சர் தனிப்பிரிவில் அளிக்கப்படும் புகார்கள் மீது, ஒரு மாதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பொதுமக்கள் புகார்களின்படி தற்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் புகார் கொடுத்தவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இதையடுத்து, முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க முதல் இடம் பிடிக்க, முதல் நாள் இரவு முதலே தலைமை செயலகத்துக்கு வந்துவிடுகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணி முதலே கோட்டை முன்பு மக்கள் குவிந்துவிட்டனர். அவர்களை அங்கிருந்த போலீசார் சாலையோரம் அமரச்செய்தனர். சிலர், முன்வரிசையில் சென்று மனு கொடுப்பதற்காகவே, சாலையோரத்தில் இடம் பிடித்து அங்கேயே படுத்து தூங்குகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க சாலையில் காத்து நிற்கின்றனர். முதியோர், கர்ப்பிணி பெண்கள், பாலுட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் இதில் அடங்குவர். தற்போது கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் இருந்தாலும், இதுபோல் புகார் மனுக்கள் அளிக்க ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்து வருவதால், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் புகார் மனுக்கள் அளிக்க நேரில் வரவேண்டாம் என்றும், அதற்கு பதில் முதலமைச்சரின் தனிப்பிரிவின் இணையதள முகவரியான www.cmcell.tn.gov.in, இ-மெயில் முகவரியான cmcell@tn.gov.in ஆகியவை மூலம் அளிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அப்படி அளிக்கப்படும் மனுக்களின் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு அறிவித்தும், பொதுமக்கள் அதை கடைப்பிடிக்காமல் நேரில் புகார் அளிக்க நேற்று அதிகாலை முதலே தலைமை செயலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வரிசைப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இன்றி முறைப்படுத்தினர். பின்னர் முதலமைச்சர் தனிப்பிரிவு செயலாளர் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றனர்.

Related Stories:

More
>